கர்நாடக தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையே இந்துத்துவ அரசியல் தொடர்பாக கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக, மஜத (மதச்சார்பற்ற ஜனதா தளம்) ஆகிய 3 கட்சிகளும் தனித்துப் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வட கர்நாடகாவிலும், கடலோர கர்நாடகாவிலும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பொது அமைதி சீர்குலைந்துள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று கண்டித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரதுர்கா வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, “சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்துவிட்டது. மக்களின் வரிப்பணத்தை வைத்து, காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. சித்தராமையாவின் ஆட்சியில் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த 23 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலைகளுக்கு காரணமான இஸ்லாமிய அமைப்புகளை சித்தராமையா தடை செய்யவில்லை. ஏனென்றால் அவர் ஒரு இந்து விரோதி” குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலடியாக முதல்வர் சித்தராமையா, “சட்டம் ஒழுங்கை கெடுக்கும் எந்த அமைப்பையும் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. வன்முறையை எந்த வடிவிலும் ஆதரிக்க முடியாது. இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்யுமாறு பாஜக போர்க்கொடி தூக்கி வருகிறது. இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க கூடாது. சொல்லப்போனால் பாஜக, பஜ்ரங் தளம், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தான் கர்நாடகாவில் வன்முறையை தூண்டிவருகின்றன. குஜராத், உத்தரபிரதேசம் போன்று கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க அமித்ஷா சதித் திட்டம் தீட்டி வருகிறார். அவரது கனவு ஒருபோதும் பலிக்காது” என்றார்.
இந்துத்துவ அரசியல் குறித்து அமித் ஷா, சித்தராமையா இடையே கடும் வார்த்தை போர் ஏற்பட்டுள்ளதால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.