இதுபோன்ற வீர சாசகங்கள் எல்லாம் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்… உத்தரபிரதேசத்தில் கடும்குளிரால் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், சாலையோரத்தில் வீடுகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு போர்வைகள் அளிக்கும் நிகழ்ச்சியை பாஜக ஏற்பாடு செய்திருந்தது.
தலைநகர் லக்னோவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிதாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏழைகளுக்கு போர்வைகளை விநியோகிப்பதில் யார் முதலில் புகைப்படம் எடுப்பது என்பதுதான்.
இந்த விவகாரத்தில், உள்ளூர் பாஜக எம்.பி., ரேகா வெர்மாவுக்கும், மகோலி சட்டசபை உறுப்பினர் சஷாங் திரிவேதி எம்.எல்.ஏ.க்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஒருவரையொருவர் அடிக்க முற்பட்டபோது, அவருடைய ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில், பாஜக எம்.பி, ரேகா வெர்மா தனது காலணியை எடுத்து சட்டமன்ற உறுப்பினர் சஷாங் திரிவேதியை தாக்க முற்பட்டார்.
அதனை காவலர் ஒருவர் தடுத்தார். இதையடுத்து, அவரை கன்னத்தில் அறைந்தார் ரேகா வெர்மா. இந்த பிரச்சனையால் அந்த இடமே ரனகளமாக மாறியது. இதனால், நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. கடும்குளிரில் நடுங்கிய மக்கள், கடைசியில் போர்வை கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுபோன்று பொதுநிகழ்ச்சிகளில் அதிகார மோதல்களும், விளம்பர உதவிகளும் நிகழாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.