சென்னை : பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன் (64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன். 1954ல் செங்கல்பட்டில் பிறந்த ஞாநி சங்கரன். தந்தையை போலவே பத்திரிகை துறையில் பணிபுரிய வேண்டும் என பத்திரிகை துறைக்கு வந்தார். அரசியல் விமர்சகராக தனக்கு தோன்றியதை தைரியமாக எழுதக்கூடியவர். பரீக் ஷா என்ற குழுவை 30 ஆண்டுகளாக நடத்தி வந்தார். கடந்த 2014-ல் ஆம் ஆத்மி கட்சி சார்பாக ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஞாநி, பின்பு அக்கட்சியில் இருந்து விலகினார். இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் உயிர் பிரிந்தது. எழுத்தாளர் ஞாநிக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மனுஷ் நந்தன், கமலின் மன்மதன் அம்பு, யான் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஞாநி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஞாநி சங்கரனின் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இறக்கும் தருவாயிலும் அரசியல் விமர்சனம் செய்த ஞாநி: நள்ளிரவு இறக்கும் முன்பு நேற்று நடந்த துக்ளக் நிகழ்ச்சி பற்றி எழுத்தாளர் ஞாநி சங்கரன் விமர்சனம் செய்தார். துக்ளக் நிகழ்ச்சி குறித்து தனது முகநூலில் ஞாநி சங்கரன் பதிவிட்டுள்ளதாவது: துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க பி.ஜே.பி சங்கப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும் என்று தெரிவித்தார்.
ஞாநியின் உடலுக்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, முத்தரசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். கவிஞர் வைரமுத்துவும் ஞாநியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்கு பின் பேட்டியளித்த அவர் தமிழகத்தில் சிறந்த அறிவாளிகளில் ஒருவர் மறைந்து விட்டார் என்று கூறினார்.
மேலும் 5 முகங்கள் கொண்ட ஞாநியை மரணம் ஒரே நாளில் எடுத்துக் கொண்டது என்றும் தெரிவித்தார். இதேபோல் நடிகர் ரஜினிகாந்த் எழுத்தாளர் ஞாநியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர் எழுத்தாளர் ஞாநி எனது நண்பர். நான் அவரது ரசிகன். தனக்கு சரியென தோன்றியதை பயமின்றி பேசக்கூடியவர், எழுதக் கூடியவர் ஞாந என தெரிவித்தார். இதற்கிடையே மறைந்த எழுத்தாளர் ஞாநிக்கு திமுக செயல்தலைவர், டிடிவி தினகரன், திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின்: பத்திரிகையாளர் ஞாநியின் மறைவு மிகுந்த வேதனை, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஞாநியின் மறைவு, தமிழ் பத்திரிகையுலகிற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு ஆகும். அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துகள் இருப்பினும், எப்போதும் சுயசார்புடன் இயங்கி வந்தவர் ஞாநி. தனிப்பட்ட முறையில் என் மீதும் அன்பு செலுத்தி, ஒரு பத்திரிகையாளராக தனது கருத்துகளை வெளிப்படையாக பரிமாறிக் கொண்டவர் ஞாநி.
டிடிவி தினகரன்: ஞாநியின் மறைவு பத்திரிகையுலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
ராமதாஸ்: அரசியல் களத்திலும் கால் நனைத்து பார்த்தவர் ஞாநி, அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து சமூகத்திற்காக உழைத்திருக்க வேண்டும்.
தமாகா தலைவர் வாசன். கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பவர் ஞாநி. ஞாநியின் மறைவு தமிழகத்திற்கு இழப்பு.
திருநாவுக்கரசர்: முற்போக்கு சிந்தனையும், மனித நேயமும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட ஞாநியின் மறைவு, ஈடு செய்ய முடியாத இழப்பு. எந்தக்கருத்தையும் எந்த சமயத்திலும் துணிச்சலுடன் கூறக்கூடிய பேராண்மை பெற்றவர் எழுத்தாளர் ஞாநி.
வைகோ புகழாரம்: பத்திரிகையாளர் ஞாநி மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன். நடுநிலை தவறாமல் தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களில் படைத்தவர் ஞாநி.
பொன்.ராதாகிருஷ்ணன்: எழுத்தாளர் ஞாநி மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனையும் வருத்தமும் அடைந்தேன்.
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி: கடைசி மூச்சு வரை சமூகத்திற்கான மனிதராகவே வாழ்ந்தவர் ஞாநி.
சுமந்த் சி ராமன்: சமூக அக்கறை கொண்ட மனிதர் ஞாநி.