உலகில் சுற்றுலாப்பயணிகளால் மிக அதிகம் ஈர்க்கப்பட்ட நகரங்களில் தொடர்ந்து 9-வது முறையாக ஹாங்காங் முதலிடத்தில் உள்ளது.
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து செயல்பட்டுவரும் யூரோமோனிட்டர் இன்டர்நேஷனல் என்ற சந்தை நிலவர ஆய்வு நிறுவனமானது மேற்கொண்ட ஆய்வில் குறித்த நகரங்களில் பட்டியல் தெரியவந்துள்ளது.
இதில் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கிச் செல்லும் நகரங்களை குறித்த நிறுவனம் ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வருகிறது.
அதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் ஹாங்காங் நகரம் சுமார் 26.6 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் 21.2 மில்லியன் எண்ணிக்கையுடன் தாய்லாந்து தலைநகர் பாங்காக் உள்ளது.
மொத்தமாக 100 நகரங்கள் தொகுக்கப்பட்டதில் 41 நகரங்கள் ஆசிய கண்டத்தில் இடம்பெற்றுள்ளன. 2010 ஆம் ஆண்டு இது 34 என இருந்துள்ளது.
ஐரோப்பாவை பொறுத்தமட்டில் பயங்கரவாத தாக்குதல், அகதிகள் பிரச்னை, Brexit உள்ளிட்ட காரணிகளால் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளதாக குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருப்பினும் அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த ஐரோப்பிய நகரங்களில் 19.2 மில்லியன் எண்ணிக்கையுடன் குறித்த பட்டியலில் 3-வது இடத்தில் லண்டன் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 12.7 மில்லியன் பார்வையாளர்களுடன் 8-வது இடத்தில் உள்ளது.