தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அரசுப் பேருந்துகளின் டிக்கெட் கட்டணத்தை அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வினால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எதிர்க்கட்சிகளும் இந்த கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.இந்நிலையில், தமிழக அரசு உயர்த்திய டிக்கெட் கட்டணத்திற்கு இணையாக கட்டணத்தை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்து, தமிழகத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஈ.சி.ஆர். வழியாக வரும் பேருந்து கட்டணம் 100 ரூபாயில் இருந்து 145 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பைபாஸ் வழியாக வரும் பேருந்துகளில் 140 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன பேருந்து கட்டணம் 200 ரூபாயில் இருந்து 315 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுவை-காரைக்கால் டிக்கெட் கட்டணம் 80 ரூபாயில் இருந்து 120 ரூபாயாகவும், புதுவை-பெங்களூர் டிக்கெட் கட்டணம் 215 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும், புதுவை-திருப்பதி கட்டணம் 170 ரூபாயில் இருந்து 290 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.