அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சை மாவட்டம்,அதிரை அருகே பட்டுக்கோட்டையில் ரவுடியை பிடிக்கச் சென்ற போலீஸார் வானம் நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாந்தாங்காடு என்ற பகுதியில் வெட்டிக்காடு என்ற இடத்தில் பதுங்கியிருந்த ரவுடி கார்த்தி உள்ளிட்ட இருவரை பிடிக்க போலீஸார் நள்ளிரவில் சென்றனர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்ற போது ஊர்க்காவல்படையை சேர்ந்த மணிகண்டன் என்பவரை ரவுடி கார்த்தி கட்டையால் தாக்கியுள்ளான். இதனை பார்த்து அதி்ர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் விஜயகிருஷ்ணன், தன் துப்பாக்கியை எடுத்து வானம் நோக்கி 2 முறை சுட்டுள்ளார்.
இதனால் பீதியடைந்த இரு ரவுடிகளும் எங்கே தங்களை போலீஸ் சுட்டுவிடுமோ என்ற பயத்தில் தரையில் படுத்தனர். இதனையடுத்து அவர்களை சுற்றி வளைத்த காவல்துறை கைது செய்தனர். பட்டுக்கோட்டை சுண்ணாம்புகாரத் தெருவில் பள்ளி மாணவியை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால் அங்கு ஏற்பட்ட தகராறில் ஒருதரப்புக்கு ஆதரவாக ரவுடி கார்த்தி மோதலில் ஈடுபட்டுள்ளான். போலீஸ் வருவதை அறிந்து அங்கிருந்து கார்த்தி தப்பியுள்ளான். இதனையடுத்து அவனை பிடிக்க போலீஸார் நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.