அதிரை எக்ஸ்பிரஸ்:- இனிமேல்தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை இணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவசர தேவைகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்.
இதுவரை தட்கல் முறையில் விண்ணப்பிப்பவர்கள் மத்திய அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டி இருந்தது. தற்போது இதற்கான விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், பாஸ்போர்ட் வழங்கும் முறைகளை எளிமைப்படுத்தி மத்திய வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி உடனடியாக பாஸ்போர்ட் பெற உதவும் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு மற்றும் பாஸ்போர்ட் வழங்கியபின் போலீசாரின் சரிபார்த்தலை மேற்கொள்ளும் திட்டத்திலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட தட்கல் பாஸ்போர்ட் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்கள் அரசு உயர் அதிகாரிகள் வழங்கும் உறுதி சான்றிதழை (வெரிபிகேஷன் சர்ட்டிபிகேட்) விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.
விண்ணப்பதாரர்கள் தங்களின் ஆதார் எண், ஆதார் மின்னணு பதிவு அட்டை மற்றும் இணைப்பு படிவம் – E ஆகியவற்றுடன், குறிப்பிடப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் 2 ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெறலாம்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பாரா 2 (பி)-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஓர் ஆவணத்தை சமர்ப்பித்து தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறலாம்.
இதன்படி முதல் முறை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்கள் கூடுதல் தட்கல் கட்டணம் செலுத்தாமல் பாஸ்போர்ட் பெறுவதற்கு தங்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் இணைப்பு படிவம் E -யை வழங்கி பெற்றுக் கொள்ளலாம்.
போலீசார் சரிபார்க்கும் நடவடிக்கை பின்னர் மேற்கொள்ளப்படும். அவர்கள் சாதாரண முறையிலேயே விண்ணப்பிக்கலாம். தட்கல் முறையில் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது