Home » கொலைநிலங்களாகி வரும் விளைநிலங்கள் !!

கொலைநிலங்களாகி வரும் விளைநிலங்கள் !!

0 comment

நிறத்தையும் சுவையையும் அதிகரிக்க தர்பூசணிக்கு ஊசி போடுகிறார்கள். ஊசியின் மூலம் விளைவிக்கப்படும் தர்பூசணி 60 நாட்களிலேயே விற்பனைக்கு வந்துவிடுகின்றன என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கோடை வெயிலை சமாளிக்க உதவும் தோழனாக இருந்த தர்பூசணியை மக்கள் விரோதியைப் போல் முறைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 40 நாட்களில் விற்பனைக்கு வரும் பிராய்லர் கோழியை ஒதுக்கி வைத்தவர்கள் , தர்பூசணியையும் ஒதுக்க ஆரம்பித்துவிட்டனர்.

எல்லா விவசாயிகளும் இப்படி ஊசி போட்டு விளைவிக்கும் வியாபாரிகளாகி விடவில்லை. ஆனால் அச்சம் காரணமாக , எல்லா தர்பூசணியையும் நாம் ஒரே கண்ணோட்டதுடனேயே பார்க்கிறோம். இதனால் நேர்மையாக விவசாயம் செய்து இந்த கோடையில் தர்பூசணி விற்று பட்ட கடனை அடைத்துவிடலாம் என்று நம்பியிருந்த விவசாயிகளின் நம்பிக்கையிலும் மண் விழுந்திருக்கிறது.

தர்பூசணி மட்டுமல்ல சுரைக்காய் , வெள்ளரிக்காய் உட்பட பல காய்கறிகளுக்கு ஊசி போடப்படுகிறது என்கிற உண்மையை எத்தனை பேர் அறிவீர்கள் ? நாம் உடல்நலக்கேட்டால் போட்டுக்கொள்ளும் ஊசிக்கும் , காய்கறிகளுக்கு போடப்படும் ஊசிக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டுமே ஊசிக்கள் தான். ஆனால் ஒன்று பிழைக்க வைக்க போடப்படும் ஊசி. மற்றொன்று நம்மை சாகடிக்க போடப்படும் ஊசி.

இயற்கையில் விளைந்தவற்றையும் , பழுக்கவைக்க செயற்கை முறை கையாளப்படுகிறது. தடைசெய்யப்பட்ட கால்சியம் கார்பனைடு பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும்போது , அதிலுள்ள விஷத்தன்மை வாய்ந்த ஆர்சனிக் , பாஸ்பரஸ் போன்றவைகள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலை நேரடியாக பாதிக்கிறது.

விளையாட்டு வீரர்கள் திறன்களை அதிகரிக்க ஊக்கமருந்து ஊசி போட்டுக்கொள்வார்கள். முதலில் உடலுக்கு திறனைக் கொடுக்கும் ஊசிகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டால் உடலை சிதைத்து உருக்குலைக்கும். அதுபோல இரசாயன உரம் முதலில் அமோக மகசூலைத் தந்து இப்போது மண்ணை மலடாக்கிவிட்டது.

விளைநிலங்கள் மட்டும் மலடாகவில்லை. அந்த உணவுகளை தின்று நாமும் மலடாகிவிட்டோம்.

எல்லா காய்களிலுமே வாடும் தன்மை குறைந்திருக்கிறது. எப்போதும் பளிச்சென்று தெரிகிறது. இதற்கு காய்கறிகள் மீது அடிக்கப்படும் மருந்துகள் மட்டும் காரணம் அல்ல. மரபணு மாற்றங்களும்தான்.

காய்கறி உணவு உடலுக்கு ஆரோக்கியம். அதிகமாக பச்சைக் காய்கறிகள் உண்டால் இதயநோய் , பக்கவாதம் முதலான பல நோய்களிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மரபணு மாற்றப்பட்ட காய்கறிகளும் , இரசாயன உரங்களும் ஊசிகளும் தகர்த்துவிட்டன. விளைநிலங்கள் கொலைநிலங்களாகி வருகின்றன.

ஐயோ இனி உணவுக்கு என்ன செய்யபோகிறோம் என யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒரு காலத்தில் காய்ச்சல் தலைவலி வந்தால் மூலிகைகளை பயன்படுத்தி கஷாயம் வைத்து குடித்த நாம் இன்று இரசாயன மாத்திரை போட்டுக் கொள்ளவில்லையா ? அதுபோல உணவுக்கும் மாற்றாக மாத்திரைகள் வந்துவிடும்.

என்ன குழந்தை பெற்றுக்கொள்ளும் தன்மையை மட்டும் இழந்துவிடுவோம். ஆனால் செயற்கையாக குழந்தையை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துவிடுவோம்.

நமக்கு எப்படிப்பட்ட குழந்தை வேணுமோ அதை கடையில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். நாமே வளர்க்கலாம். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம். ஆனால் கடையில் வாங்கும் குழந்தைகளிடம் அன்பு , பாசம் முதலான உணர்ச்சிகள் இருக்கப்போவதில்லை. எல்லாமே எந்திரமயமாக இருக்கும். அதை மனிதர்கள் என்று சொல்லிக்கொள்ளலாம். இப்போது மக்கா சோளத்தின் மரபணுவையும் , பாம்பின் மரபணுவையும் கோதுமையில் செலுத்தி உருவாக்கப்பட்ட , கோதுமையின் வடிவத்தை ஒத்திருக்கும் அதிக மகசூல் தரும் புதிய உயிரை கோதுமை என்று சொல்லவில்லையா ? ; அதிக பால்சுரக்க பன்றியின் மரபணு செலுத்தி உருவாக்கப்பட்ட புதிய உயிரினத்தை பசுக்கள் என்று சொல்வதில்லையா ? … அப்படி இந்த புதிய உயிரினத்தையும் மனிதன் என்று சொல்லிக் கொள்ளலாம்…!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter