இந்தப் பதிவு சிந்திப்பதற்காகவே அன்றி, யாரையும் தாக்குவதற்காகவோ, மனம் புன்படுவதற்காகவோ அல்ல… இது நம்மில் பலருக்கு அன்றாடம் நடக்கக் கூடிய சிந்தனையூட்டும் ஒரு கற்பனை பதிவே.. குற்றங் குறைகள் இருப்பின் என்னை மன்னிக்கவும்..!
சரி வாங்க உள்ள போவோம்..
பல வருசமா வாஷிங்டனில் குடும்பத்தோட வசித்து வந்த நம்ம புதுமனைத் தெரு கபீரு கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சம்பாத்தியத்துல தனது தம்பி முநீரு மேற்பார்வையில ஒரு வீட்டை கட்டி முடிச்சு சந்தோசமா வந்து போவாரு வெக்கேசன் லீவுல..,
அப்படியிருக்கையில் ஒரு வெக்கேஷனுக்கு ஊருக்கு வந்தார் கபீர். வாஷிங்டனில் இருந்து தனது புது வீட்டுக்கு வாங்கி வந்த சில பல அழகு சாதன பொருட்களையும் வாங்கி வந்தார். அந்த அழகு சாதனங்களை வீட்டின் ஹாலில் சிறிய ஆணிகளை அடித்து தொங்க விட்டு வீட்டிற்கு மேலும் அழகு சேர்க்க முடிவு செய்தார்..
அதனால் ஆணி அடிக்க தேவையான சுத்தியலை வீட்டில் தேடினார். தேடித் தேடி கிடைக்கவில்லை என்பதால் பக்கத்து வீட்டு சபீரிடம் இரவல் வாங்கலாம் என நினைத்தார். ஆனால் இரவாகி விட்டதே அதனால் காலையில் வாங்கிக் கொள்ளலாம் என்று மட்ட மல்லாக்காக படுத்து நன்றாக குறட்டை விட்டு தூங்கினார்..
கொர்ர்ர்ர்ர்.. கொர்ர்ர்ர்ர்…
காலையில் எழுந்து, பக்கத்து வீட்டு சபீரிடம் சுத்தியல் வாங்கலாம் என்று கிளம்பும் போது..,
காலங்காத்தால இரவல் கேட்க வந்துட்டானேனு பக்கத்தூட்டு சபீர் நெனைச்சுட்டா நாம என்ன பன்றது., சரி அப்றம் கேட்டுகலாம்னு விட்டுட்டாரு கபீரு…!
இப்படியே ஒவ்வொரு நாளும், மக்ரிப்க்கு விளக்கு ஏத்துற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பாரு..
வெள்ளிக்கிழமையும் அதுவுமா இரவல் கேட்குறானே என்று பக்கத்து வீட்டு சபீரு இப்படி நம்மிடம் எதையாவது சொல்லிவிட்டால் அவமானமாகிவிடுமே என்ற தயக்கத்திலே பல நாட்கள் சுத்தியலை கேட்காமலையே விட்டுவிட்டார் அந்த கபீர்..
வாஷிங்டனில் தான் ஆசை ஆசையாக வாங்கி வந்த அழகு சாதனப் பொருட்கள் வீட்டின் ஹாலில் மாட்டப்படாமல் அட்டைப் பெட்டியிலே அடைபட்டிருப்பதை நினைத்து மிகவும் வருத்தமுற்றார்..
ஒவ்வொரு நாளும் இப்படியே அந்த அழகு சாதனப் பொருட்களை பாவமாகவும், பவ்வியமாகவும் பார்த்துக் கொண்டிருந்த கபீருக்கு சுருக்கென்று கோவம் வந்தது..
கோவம் வந்தவுடனையே பக்கத்து வீட்டு சபீரிடம் சென்று…,
யோவ்..சபீரு..போய்யா.. நீயெல்லாம் ஒரு மனுசனா.. ஏன்யா இப்புடி ஈக்கிரா.. ச்சீ.. உன் சுத்தியலும் வேணாம் ஒன்னும் வேணாம் நீயே வச்சுக்கோனு கோவக்கார கபீர் சத்தம் போட, சஹருக்கு சப்பாத்தி குருமா சாப்பிட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சபீருக்கோ ஒன்னுமே புரியல..
ஹ்ம்ம்ம்ம்… இப்டிதாங்க……
அடுத்தவர்களிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசி தெரிந்து கொள்ளாமல், நாமாகவே இப்படி சொல்லுவாரோ, அப்படி சொல்லுவாரோ என்று நினைத்து நினைத்து தாய் தந்தையர்களிடமும், அண்டை வீட்டார்களிடமும் , நண்பர்களிடமும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம்..
அதனால அப்துல் வஹாப் எனும் நான்., சொல்ல வருவது என்னவென்றால்,
பிறர் மீதான, முன்முடிவுக்காக கோபப்படுதல், தவறான அபிப்ராயங்கள், மற்றவர்களைப் பற்றி தவறான முன் மதிப்பீடுகள் போன்றவற்றை நாம் முற்றிலுமாய் தவிர்த்து மனிதநேயத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வோம்..
இறைவன் நாடினால், வேறொரு தலைப்பில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்..!
ஆக்கம்,
S.அப்துல் வஹாப் BBA.,
(பொறுப்பாசிரியர்)
அதிரை எக்ஸ்பிரஸ்