Nசென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 33). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகம் அருகே, சாலையில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி பர்கத் நிஷா (27). இவர்களுக்கு 2½ வயதில் முகமது சாது என்ற மகன் உள்ளான்.
குழந்தை முகமது சாது நேற்று பிற்பகல் தனது வீட்டின் அருகே சாலையில் விளையாடிக்கொண்டிருந்தான். விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை திடீரென காணவில்லை. இதனை தொடர்ந்து அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் முகமது சாதுவை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தையை மர்மநபர்கள் யாரோ கடத்தி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆர்.கே. நகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார் கள்.
நேதாஜி நகர், முதல் தெரு மற்றும் 2-வது தெருவில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், குழந்தை முகமது சாதுவை சைக்கிளின் முன்பக்கம் வைத்து கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
கேமராக்களில் பதிவாகி இருந்த வாலிபரின் முகத்தை வைத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், அந்த காட்சிகளை வைத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை கடத்தப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.