ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி மரணம் அடைந்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி எம்எல்ஏவாக இருந்த தொகுதியான திருவாரூர் தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்னும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கான தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 3ம் தேதி தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 10. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜனவரி 14.
தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேதிகள் அறிவிக்கப்பட்டதால் இன்றில் இருந்து திருவாரூரில் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிறது.
இந்த தொகுதியில் திமுக, அதிமுக, அமமுக மற்றும் மற்ற கட்சிகள் யாரை நிற்க வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளதால் இப்போதே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.