கேரளாவில் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள் அரசுமுறை பயணமாக கடந்த ஞாயிறு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
டாக்டர். ஷேக் சுல்தான் அவர்களிடம் கேரள முதன்மந்திரி கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஷார்ஜாவில் செல்லுபடியாகும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் மையம் ஒன்றையும், அரபி மொழி பயிற்சி மையம் ஒன்றை ஏற்படுத்தவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். அமீரகத்திற்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் செல்பவர்கள் இந்த கேரளா – ஷார்ஜா மையத்திலேயே டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.
தற்போது கேரளாவில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் அமீரக துணை தூதரகத்திற்கு சொந்தமான கட்டிடம் கட்டத் தேவையான நிலத்தை வழங்கவும் கேரளா அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல், ஷார்ஜாவில் 20 ஏக்கர் நிலத்தில் கேரளா கலாச்சார மையம் ஒன்றை அமைக்க அனுமதி தரும்படியும் கேரள முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலத்தில் 10 ஏக்கரில் கட்டடப்படும் கட்டுமானத்தில் கேரள மக்கள் குடும்பத்துடன் வசிப்பர், எஞ்சிய 10 ஏக்கர் இடத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றும், ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றும், கேரளாவின் காலச்சாரத்தையும், கலை பண்பாடுகளையும் எடுத்துக்கூறும் மையம் ஒன்றை அமைக்கவும், கேரள மக்கள் அந்த மையத்திற்குள் தங்களுடைய சமூக கூட்டங்களையும், கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும் அனுமதியளிக்கும்படியும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
மேலும் நேற்று கேரளா முதல்வர் கோரிக்கை அடிப்படையில் ஷார்ஜா சிறையில் வாடும் 149 இந்தியர்களுக்கு விடுதலையும் சாத்தியமானது குறிப்பிடத்தக்கது.
நம்ம தமிழக ஆட்சியாளர்கள் ஒரு வருடத்திற்கு முன் இறந்த தங்கள் தலைவியின் மரணம் குறித்தே இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ள நிலையில் வெளிநாடு வாழ் தமிழர்களை பற்றி அவர்களுக்கு சிந்திக்க எங்கே நேரமிருக்கப் போகிறது?