Home » எதற்காக சந்திரயான்-2 திட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் ? மமதா பானர்ஜி அதிரடி !

எதற்காக சந்திரயான்-2 திட்டத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் ? மமதா பானர்ஜி அதிரடி !

0 comment

என்னமோ இதற்கு முன்பாக இந்திய விண்வெளி ஆய்வு நடக்காதது போலவும், சந்திரனுக்கு இப்போதுதான், முதல் முறையாக, விண்கலத்தை அனுப்புவது போலவும் பாஜக அரசு ரொம்பவே பில்டப் கொடுக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.

இந்தியா சார்பில் 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் நிலவை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது. நிலவில் தண்ணீர் ஆதாரங்கள் இருப்பதை கண்டறிந்து உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

அப்போது மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி மத்தியில் நடைபெற்று வந்தது.

தற்போது மோடி தலைமையில் பாஜக கூட்டணி அரசு பதவி வகிக்கும் நிலையில், சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் விண்கலத்தில் இருந்து ஏற்கனவே பிரிந்துள்ள, லேண்டர், நிலவின் மீது தரை இறங்குகிறது. இதன்பிறகு, பிரக்ஞான் என்றழைக்கப்படும் ரோவர் வெளியே வந்து நிலவை ஆய்வு செய்கிறது.

இதை ஒட்டி, பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து, இந்த நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்க உள்ளார். 130 கோடி இந்தியர்களும் இந்த நிகழ்வை, உன்னிப்பாக கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள், என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட ட்வீட்டில், தெரிவித்தார்.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று அம்மாநில சட்டசபையில் நடைபெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சந்திரயான்-2 திட்டத்திற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் மற்றும் மத்திய அரசு காட்டும் ஆர்வம் தொடர்பாக சந்தேகம் எழுப்பினார்.

மமதா பானர்ஜி கூறுகையில், “இந்தியா இப்போது தான் முதல்முறையாக சந்திரனை ஆய்வு செய்வதற்கு விண்கலத்தை அனுப்பி உள்ளதை போலவும், பாஜக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக நிலவை ஆய்வு செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படாது போலவும், ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டது. இதில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக, சந்திரயான்-2 திட்டத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கிறது”, இவ்வாறு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் மமதா பானர்ஜி.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter