Home » தஞ்சை மற்றும் புதுகை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)

தஞ்சை மற்றும் புதுகை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் !(படங்கள்)

0 comment

தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மல்லிப்பட்டினம் துறைமுக வளாக கட்டிடத்தில் மாநில மீனவர் பேரவை பொதுச்செயலாளர் A. தாஜுதீன் தலைமையிலும், தஞ்சை மாவட்ட தலைவர் A. ராஜமாணிக்கம், மாவட்ட செயலாளர் வடுகநாதன், புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சின்ன அடைக்கலம், மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது மற்றும் சங்க நிர்வாகிகள் செல்வகிளி இபுராஹீம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 : கஜா புயலால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதியில் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணம், தற்போதைய விலைவாசிக்கு 10 சதவிகிதம் கூட ஆகாது. இந்த சிறு நிவாரணத்தை கொடுத்துவிட்டு அரசு மெத்தனபோக்குடன் இருந்துவருவது, மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எனவே அரசு நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 2 : தற்போதைய மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 2019 மீனவர் சட்ட முன்வரைவை முற்றிலுமாக எதிர்ப்பதுடன், தற்போதைய பழைய சட்டத்தையே நடைமுறைப்படுத்திட வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கும் வகையில் அரசு சட்டங்கள் இயற்றக்கூடாது என அனைத்து மாவட்ட மீனவர்கள் சார்பாக கேட்டுக்கொள்வதுடன், அரசு இத்தகைய சட்டங்களை கொண்டு வரும் பட்சத்தில் மாநிலம் தழுவிய மீனவர்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவதென தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3 : தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் புதிய துறைமுகத்தில் தூண்டில் வளைவு போடாமல் அமைக்கப்பட்டுள்ளதால், அலையின் சீற்றத்தில் படகுகள் துறைமுக பாலத்திலேயே மோதி படகு அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. உடன் வரும் புயல் காலத்திற்கு முன்பாக தூண்டில் வளைவு அமைத்திடவும், இப்பகுதியில் இருக்கிற ஆற்று முகத்துவாரங்களில் ஆழப்படுத்தி படகுகள் உள்ளர் சென்றுவரும் வகையில் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தீர்மானம் 4 : மேற்கண்ட தீர்மானங்களை உடனே அரசு நிறைவேற்றித்தர வேண்டும் எனவும், இது சம்மந்தமாக பல்வேறு கோரிக்கைகளும், நேரிலும், எடுத்துக்கூறியும் அரசு செவி சாய்க்காமல் இருந்து வருவது மீனவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே இன்று முதல் அரசை வலியுறுத்தும் வண்ணம் மேற்கண்ட இரண்டு மாவட்ட மீனவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் இந்த காலங்களில் சங்க பிரதிதிகளுடன் சென்னை சென்று முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தீர்வு காண வழிவகை செய்வது என்றும் ஏக மனதாக தீர்மானிக்கப்படுகிறது.

நாட்டுப்படகு, விசைப்படகு என்ற பேதமில்லாமல் அனைத்து மீனவர்களும் வரும் காலங்களில் இணைத்து செயல்படுவது என்றும் தற்போது தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இரு தரப்பு மீனவர்களும் கலந்து ஆலோசனை செய்து இரு தரப்புக்கும் இடையே உள்ள பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவந்து வரும் சந்ததியினருக்கு வாழ்வாதாரங்களுக்கு வழிவகை செய்து கொடுத்து தொழில்கள் மேம்பட வழி வகைகள் காணுவது எனவும் இதை மற்ற மாவட்டங்களுக்கும் எடுத்துச்சென்று போன்றுபட்டு செயல்பட வேண்டுமென தீர்மானிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter