அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறது.
குமரிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருவதால் அது புயலாக மாறப் போகிறது.
இதன் விளைவாக தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைவதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் தமிழகத்தை தாக்காது. லட்சத்தீவை இந்த புயல் கடந்து செல்லும். அதேசமயம், தமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும். குறிப்பாக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை கிடைக்கும்.
முக்கியமாக புதுக்கோட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை ,நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர், திருநெல்வேலி, திருச்சி ,அரியலூர், மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.