சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்து, மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரும் பதவியேற்றனர்.
பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், நாளை மாலை 5 மணிக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை அடுத்து, தேவேந்திர ஃபட்னாவிசை இன்று, அஜித் பவார் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நீண்ட நேர ஆலோசனையை அடுத்து, துணை முதலமைச்சர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இன்று மாலை தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, தேவேந்திர ஃபட்னாவிசும் தனது ராஜினமாவை அறிவிப்பார் என கூறப்படுகிறது.