Home » வளைகுடா நாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா !

வளைகுடா நாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா !

0 comment

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பல வெளிநாடுகளில் இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கத் திட்டமிட்டு வருகின்றது. இப்பணியில் இந்திய விமானப்படையும், இந்தியக் கப்பல் படையும் களமிறங்க உள்ளன. மே 3 வரை இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அதற்குப் பின் இந்த மீட்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மீட்பு நடவடிக்கையானது வளைகுடா நாடுகளில் ஊரடங்கின் காரணமாக வேலை இழந்தவர்கள், வேலைக்கான பதிவு முடிவு பெற்றவர்கள், இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்று முடிவுடன் இருப்பவர்கள் மற்றும் கோவிட் 19 நோயால் தாக்கப்பட்டவர்களையும் மீட்பதாகும்.

தாயகத்திற்குத் திரும்ப விருப்பம் உள்ளவர்கள், அங்கு உள்ள இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்த பின்னரே எத்தனை பேர் மீட்கப்பட வேண்டும் என்ற துல்லியமான விவரம் தெரியவரும். அதற்குப் பின்னரே தேதிகள் முடிவு செய்யப்படும் என்று தலைமைத் தூதர் கூறியுள்ளார். வளைகுடா நாடுகளில் பல இந்தியர்கள் தங்களை மீட்குமாறு தூதரகத்திற்கு சமூக வலைதளம், மின்னஞ்சல்கள் மூலம் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இந்த மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

மீட்கப்பட உள்ளவர்கள் பலர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் விமானமோ, கப்பலோ அந்த இடத்தை நேரடியாக அடையும் வகையில் பயணத் திட்டம் அமையும். வளைகுடா நாடுகளில் இருந்து வருபவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாள்கள் தனிமைப்படுத்தப் படுவர். இதுகுறித்து தயார் நிலையில் இருக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்றது. இந்த மீட்புத் திட்டத்தின்படி இதுவரை இல்லாத அளவு அதிக அளவில் மக்கள் மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த 1990-ம் ஆண்டு வளைகுடா நாடுகளில் போர் மூண்டபோது 1.7 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். அப்போது அதுவே அதிக அளவில் மக்கள் மீட்கப்பட்டதாகக் கருதப்பட்டது.

இந்திய கப்பற்படைக்கு இவ்வாறான நெருக்கடி காலங்களில் மக்களை மீட்கும் அனுபவம் உண்டு. 2004 -ல் சுனாமி , 2006 -ல் லெபனான் போர் எனப் பேரிடர் காலங்களில் மக்களை மீட்கும் பணியில் இந்திய கப்பற்படை சிறந்து செயல்பட்டு வந்துள்ளது. ஏற்கெனவே சீனா, இரான் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியர்களை மீட்டு வந்துள்ளது இந்திய விமானப்படை. தற்பொழுது வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்க C-130, C- 17 வகை விமானங்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள விமானப் படை, கப்பல் படையுடன் மீட்கும் பணியில் அனுபவமுள்ள ஏர் இந்தியாவும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

ஓமன், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய பகுதிகளுக்கு நேரடியாக விமானங்கள் அனுப்பப்படுமா அல்லது அங்கிருந்து மீட்க வேண்டிய மக்களை ஒன்று திரட்டி ஒரே இடத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. துறைமுகப் பகுதிகளில் பல இந்தியர்கள் வசிப்பதால், அங்கு நேரடியாகக் கப்பலை அனுப்பி இந்தியர்கள் மீட்கப்படாலாம். 3 போர்க் கப்பலில் 1,500 பேர் மீட்கப்படுவர் என்றும் விமானப்படை மூலம் 500 விமானங்கள் இந்த மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வளை குடா நாடுகளிலிருந்து மீட்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலித் தொழிலாளர்கள் என்பதால் பயணச் செலவை அரசே ஏற்குமா என்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter