நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுக்க மொத்தம் 37257பேர் வரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 1123 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. மே 4ம் தேதியோடு முடிய வேண்டிய ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பிற்காக மத்திய அரசு ஆரோக்யாசேது (AarogyaSetu) என்ற ஆப்பை வெளியிட்டுள்ளது. ஆரோக்யா சேது (Aarogya Setu) ஆப் தனியார் நிறுவனங்களுடன் சேர்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஆரோக்யா சேது ஆப் இந்தியாவில் மொத்தம் 11 மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கொரோனா குறித்த அறிகுறிகள், மத்திய அரசின் முக்கியமான அறிவிப்புகள், செய்திகள் கிடைக்கும்.
இந்த செயலி நாடு முழுக்க மத்திய அரசால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் கண்டிப்பாக இந்த செயலியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. நீங்கள் இருக்கும் இடம், உங்களுக்கு அருகே இருக்கும் நபர்கள் மூலம் உங்களுக்கு எந்த அளவிற்கு கொரோனா பரவ வாய்ப்புள்ளது என்பதை வைத்து இந்த ஆப் செயல்படும்.
உங்கள் ஜிபிஎஸ் லொகேஷன், ப்ளூடூத், வைஃபை ஆகியவற்றின் மூலம் இது உங்கள் இருப்பிடத்தை வைத்து உங்களை எச்சரிக்கும். இந்த செயலியை எதிர்காலத்தில் இ- பாஸ் போல பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் மத்திய அரசின் ஆரோக்ய சேது செயலியை பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதை நிறுவனத்தில் இருக்கும் நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இத்தனை நாட்கள் இந்த செயலியை அரசு கட்டாயமாக்கவில்லை. ஆனால் முதல் கட்டமாக தற்போது நிறுவன ஊழியர்கள் எல்லோரும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.