Home » கர்ப்பிணி யானைக்கு பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்த கொடூரர்கள்… மடிந்த மனிதநேயம் !

கர்ப்பிணி யானைக்கு பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்த கொடூரர்கள்… மடிந்த மனிதநேயம் !

by
0 comment

கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொடுத்ததால் தண்ணீரில் நின்ற படியே உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியான இந்த யானை மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உணவை தேடி சுற்றி வந்துள்ளது. பொதுவாக காட்டு விலங்குகளை விரட்டி அடிக்க வெடி வெடிப்பது வழக்கம். ஆனால் கேரளத்தில் காட்டு யானையை விரட்டுவதற்காக அப்பகுதி மக்கள் செய்த செயல் அந்த யானையின் உயிருக்கு உலை வைத்துள்ளது.

ஆம். யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்துகளை கொடுத்துள்ளனர். இதை யானை சாப்பிட்டதும் வாயில் வெடி மருந்து வெடித்தது. இதனால் அந்த கர்ப்பிணி யானைக்கு தாள முடியாத வலி ஏற்பட்டது. இதையடுத்து அந்த யானை தண்ணீரில் நின்றபடியே தனது உயிரைவிட்டது.

இதயத்தையே நொறுக்கும் இந்த சம்பவத்தை நிலம்பூரில் உள்ள வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் யானை ஒன்று கிராமத்தில் உணவு தேடி அலைந்தது. அப்போது மனிதர்களின் சுயநலத்தை அறியாத யானை அவர்கள் வெடிமருந்தை மறைத்து கொடுத்த அன்னாசி பழத்தை வாங்கியது.

கர்ப்பிணியான அந்த யானை வயிற்றில் உள்ள குட்டிக்காக அந்த உணவை நம்பி வாங்கியது. அந்த பழத்தை வாயில் போட்டு உண்ணத் தொடங்கியது. அப்போது அந்த பழத்தில் இருந்த வெடிமருந்து வெடிக்கத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தாய் யானை, தன்னை பற்றி கவலைப்படாமல் தன் வயிற்றில் இன்னும் 18 அல்லது 20 மாதங்களில் பிறக்கவுள்ள குட்டியை நினைத்து கவலைப்படத் தொடங்கியது.

வெடி வெடித்தவுடன் வாயில் பயங்கர காயம் ஏற்பட்டது. உடனே பசி மற்றும் வலியால் அந்த யானை அங்கும் இங்கும் சுற்றியது. எனினும் அந்த யானை மக்கள் மீது கோபம் கொள்ளவில்லை. யாரையும் தாக்கவில்லை, யாருடைய வீட்டையும் சேதப்படுத்தவில்லை. வலி தாள முடியாமல் நேராக வெள்ளியாறு ஆற்றில் போய் நின்றது.

தண்ணீரில் தனது வாயையும் தந்தத்தையும் மூழ்கடித்தபடி நின்றிருந்தது. பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. வாயில் புண் ஏற்பட்டபோது அதில் மற்ற பூச்சிகள் வந்து கடிப்பதை தவிர்க்கவே அது தண்ணீரில் நின்றிருக்கலாம்.

உடனே இரு ஆண் யானைகளை வனத்துறையினர் வரவழைத்து அதை கரைக்கு கொண்டு வர முயற்சித்தோம். ஆனால் அதை மீட்பதற்குள் நின்றபடியே உயிரைவிட்டது. இந்த சம்பவம் கடந்த 27ஆம் தேதி நடந்தது.

அதை பார்த்த போது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அழைத்து வரப்பட்ட யானைகளும் மிக வேகமாக அங்கு என்ன நடந்தது என்பதை உணர்ந்து கண்ணீரை விட்டன. இந்த யானைகளின் அழுகையாலும் மனித இனத்தின் சுயநலத்தை எதிர்த்தும் ஆற்று நீரே கொதிக்க தொடங்கியதை நான் உணர்ந்தேன்.

அந்த யானை கர்ப்பமாக இருந்தது என்பதை பிரேத பரிசோதனை செய்த போதுதான் தெரியவந்தது. அந்த யானையை நாங்கள் இறுதியாக அடக்கம் செய்தோம். ஒரு மனிதனாக அந்த சகோதரிக்கு (யானை) என்னால் மன்னிப்பு மட்டுமே கேட்க முடியும் என அந்த வனத்துறை அதிகாரி விவரித்திருந்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter