உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஜாதிக் கொடுமை நடந்துள்ளது. கோவிலுக்குள் போய் சாமி கும்பிட்டு விட்டு வந்ததற்காக ஒரு தலித் சிறுவனை உயர் ஜாதிக்காரர்கள் தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற செயல் அதிர்ச்சி அளித்துள்ளது.
கொல்லப்பட்ட இளைஞனின் பெயர் விகாஸ் குமார் ஜாதவ். 17 வயசுதான் ஆகிறது.. இந்தப் பையன், ஓம் பிரகாஷ் ஜாதவ் என்பவரின் மகன் ஆவார். ஓம் பிரகாஷ் ஜாதவ் ரொம்ப ஏழையான விவசாயி ஆவார். தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
சமீபத்தில் அங்குள்ள கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார் விகாஸ் குமார் ஜாதவ். ஆனால் கோவிலுக்குள் நீ போகக் கூடாது என்று உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர் எதிர்த்துள்ளனர்.
அதை மீறி போய் சாமி கும்பிட்டார் விகாஸ் குமார். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு நான்கு இளைஞர்கள் சேர்ந்து விகாஸ் குமாரை தலையிலும், உடம்பிலும் சரமாரியாக சுட்டுக் கொன்று விட்டனர்.
இதுகுறித்து விகாஸின் தந்தை கூறுகையில், “எனது மகன் ஜூன் 1ம் தேதி தோம்கேரா கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டான். அதை அந்த ஜாதியினர் எதிர்த்தனர். ஆனால் எனது மகன் அதைப் பொருட்படுத்தாமல் சாமி கும்பிட்டு விட்டு வந்தான். இந்த நிலையில் அந்த ஜாதியைச் சேர்ந்த ஹோரம் செளகான் என்பவர் உள்பட நான்கு பேர் சேர்ந்து எனது மகனை சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்று விட்டனர்.
அவன் கோவிலுக்கு போன அன்றே பலர் கூடி அவனை அடித்தனர். இதுதொடர்பாக போலீஸில் புகாரும் கொடுத்தோம். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கலை. எடுத்திருந்தால் என் மகன் இன்று உயிர் பிழைத்திருப்பான். சனிக்கிழமை இரவு ஹோரமும், அவனது குரூப்பைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து கொலை செய்து விட்டனர். வீட்டுக்குள் புகுந்து எனது மகனை வெளியே இழுத்துச் சென்று சுட்டுக் கொன்று விட்டனர் என்றார் அவர்.
இந்த கிராமத்தில் ஜாதவ் மற்றும் வால்மீகி ஆகிய தலித் வகுப்பைப் சேர்ந்தவர்களும், தாக்கூர் என்ற உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களும் வசிக்கின்றனர். அடிக்கடி இரு தரப்புக்கும் இடையே மோதல் மூளுவது வழக்கம். பெரும்பாலும் கோவிலுக்குள் தலித்கள் போய் விட்டாலே தாக்க ஆரம்பித்து விடுவார்களாம். இதற்கிடையே விகாஸ் கொலையில் ஜாதியோ அல்லது தீண்டாமையோ இருப்பதாக தெரியவில்லை என போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள்.
Source : One India Tamil