தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயல் நாளை தீவிர புயலாக வலுப்பெறுவதால் தமிழகம், புதவையில் நாளை முதல் 26-ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 520 கி.மீ. தூரத்தில் உள்ளது. நாளை தீவிர புயலாக வலுப்பெறும் நிவர் புயல்.
தமிழகம் மற்றும்புதுவையில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள், வடகடலோர மாவட்டங்கள், வடமாவட்டங்களில் கனமழை பெய்யும். வடமேற்கு திசையில் நகரும் நிவர் புயலானது 25-ஆம் தேதி பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும்.
புயல் கரையை கடக்கும் போது 100- 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். புயல் கரையை கடக்கும் போது சில சமயங்களில் 120 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். புயல் காரணமாக வடகடலோர மாவட்டங்களில் 45- 55 கி.மீ. வரை காற்று வீசும்.
சென்னையில் 24, 25 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும். இன்று நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும். நாளை 24-ஆம் தேதி நாகை, திருவாரூர், தஞ்சை மயிலாடுதுறை, அரியலூர் மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் அதி கனமழை பெய்யும்.
கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் புதுவையில் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் தினத்தில் நாகை, மயிலை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்பும், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் மிக அதிக மழைக்கு வாய்ப்புள்ளது.
அது போல் திருவாரூர், தஞ்சை, திருச்சி, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யலாம். அது போல் சேலம், நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
26-ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. 25-ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.