கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. இந்த சூழலில் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் கர்நாடகா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்பட பல்வேறு மாநில அரசுகள், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று அறிவித்துள்ளன.
இந்நிலையில் தமிழக அரசு கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு அறிகுறி இருந்தால், கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானால் கோவிட் கேர் மையத்தில் தங்கவைக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் 72 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று கூறியுள்ள அரசு, கொரோனா பாதிப்பை தடுக்க பல்வேறு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலை பரவுவதாக அச்சம் நிலவுகிறது. ஏற்கனவே அமெரிக்கா இங்கிலாந்து, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளிலும் பாதிப்பு குறைவில்லை. அதிகரித்தபடி இருக்கிறது. இதையடுத்தே தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.