Home » சூப்பர் ஐஏஎஸ் டீம் – முதல்வரின் தனிசெயலாளர்களாக உதயச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் நியமனம்!

சூப்பர் ஐஏஎஸ் டீம் – முதல்வரின் தனிசெயலாளர்களாக உதயச்சந்திரன் உள்ளிட்ட 4 பேர் நியமனம்!

0 comment

முதல்வர் ஸ்டாலின் முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி கல்வித்துறையில் பல முன்னெடுப்புக்களை கொண்டுவந்து வெகுவாக புகழடைந்தவர்.

அமைச்சரவை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அதிகாரிகள் குழு ஒரு முதல்வருக்கு முக்கியம். தலைமைச் செயலாளர் யார் என்பது இந்த விஷயத்தில் முக்கியத்துவம் தருவதாக இருக்கும்.

இது தவிர முதல்வரின் அலுவலகத்தில் யார் யார் அதிகாரிகளாக இருக்கப் போகிறார்கள் என்பதுதான் அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் விரைவாகவும், சிறப்பாகவும் இருப்பதை தீர்மானிக்கும்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ் :

எனவே முதல்வரின் செயலாளர் பதவி என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. முதன்மைச் செயலாளராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில், தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக பணியாற்றியவர் இவர். ஒரு கட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை விடவும் அதிகமாக பாராட்டுகளை பெறத் தொடங்கியிருந்தார்.

டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட காலத்திலும் உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார். இந்த காலகட்டத்தில் பல புதுமைகளை தேர்வாணையத்தில் புதுப்பித்தவர். அரசு தேர்வுகளுக்கு இணையதளத்திலேயே விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்வது என பல உத்திகளை கையாண்டார்.

இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் கீழடி அகழாய்வு விஷயத்தில் மிகுந்த பங்களிப்பு வழங்கி அகழாய்வை விரிவுபடுத்தினார். ஈரோடு மாவட்ட ஆட்சியாளராக இருந்தவர், சமச்சீர் கல்வி வடிவமைப்பில் உதயச்சந்திரன் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

உமாநாத் ஐஏஎஸ் :

இதேபோல மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள், ஸ்டாலினின், முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். உமாநாத் , எம்.எஸ்.ஷண்முகம், அனு ஜார்ஜ் ஆகியோர் முதல்வரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். உமாநாத் ஏற்கனவே கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர். மாவட்ட நிர்வாகத்தில் நிறைய சீரமைப்பு செய்து பெயர்பெற்றார். தமிழக மருத்துவ கொள்முதல் பிரிவில் உமாநாத் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ்

எம்.எஸ்.சண்முகம் 2002 ஐஆர்எஸ் பேட்ஜ் அதிகாரி. அருங்காட்சியக ஆணையராக பதவி வகித்து வருகிறார். பாரத் டெண்டர் பிரச்சினை வந்தபோது நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார். பாரத் டெண்டர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மறுத்தார். இதன் காரணமாகத்தான் அவர் அருங்காட்சியகம் துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டார் என்று விமர்சனங்கள் உண்டு . அவரைத் தேர்ந்தெடுத்து ஸ்டாலின் தனது பக்கத்தில் கொண்டு வந்து அமர்த்தியுள்ளார்.

அனுஜார்ஜ் ஐஏஎஸ் :

ஐஏஎஸ் அதிகாரி அனு ஜார்ஜ், தொழில்துறை கமிஷனராக பதவி வகித்தார். தொழில் மற்றும் வணிக இயக்குனராகவும் பணியாற்றி வந்தார் . அவர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி காரியத்துக்கான பணிகளை அமுதா ஐஏஎஸ்சுடன் சேர்ந்து கவனித்துக் கொண்டவர்.குறுகிய காலமே இருந்த நிலையில், சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தது இந்த டீம்.ஆக மொத்தம், ஸ்டாலின் டீமிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவருமே, நேர்மைக்கும், திறமைக்கும் பெயர் பெற்றவர்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter