தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த ஹிந்து சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார். கொரோனா தொற்றால் மரணமடைந்தவர் என்பதால் அவரை அடக்கம் செய்வதற்கு, அவரின் குடும்பத்தினர் தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடனே அக்குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று நோன்பு பெருநாள் என்றும் பாராமல், தமிழக சுகாதாரத்துரையின் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அவரின் உடலை தவ்ஹீத் ஜமாஅத்தினர் அடக்கம் செய்தனர்.
இப்பணியை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், சம்பைப்பட்டினம் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் தன்னார்வலர்கள் செய்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன், கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த 4 உடல்களை அடக்கம் செய்துள்ளதாகவும், ஒன்று தஞ்சை மாநகர பகுதி மற்றும் மற்ற 3 உடல்கள் பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் அடக்கம் செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான நோன்பு பெருநாள் அன்று கொரோனாவால் உயிரிழந்த இந்து சகோதரரின் உடலை இஸ்லாமியர்கள் அடக்கம் செய்துள்ளது, அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!




