தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நோய் தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதன்பிடி இன்று மாலை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர், அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வழங்கினார். மேலும் அதிரை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி 24 மணிநேரமும் செயல்பட வைக்க சம்மந்தப்பட்ட துறைக்கு தான் பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பூசியை அச்சமின்றி மக்கள் செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக அதிரை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை அதிரை பேரூர் திமுகவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இந்த ஆய்வின்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஐஏஎஸ், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்திரன் ஐஏஎஸ், அரசு கொறடா கோவி. செழியன் எம்எல்ஏ, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை எம்எல்ஏ, அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், அதிரை காவல் ஆய்வாளர் ஜெயமோகன், தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், பேரூர் திமுக செயலாளர் இராம. குணசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
















வீடியோ :