திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக வைக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தில் கடந்த சில நாட்களாக ஈழம், இலங்கை போர் குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன. டிவிட்டரில் பல்வேறு தரப்பினர் தங்களின் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சியை சேர்ந்த வினோத் என்ற கார் நிறுவன ஊழியர் ஒருவர் செய்த டிவிட் காரணமாக இன்று பிற்பகலில் மிரட்டப்பட்டார்.
எல்டிடிஇ பிரபாகரன் குறித்து வினோத் என்பவர் செய்த டிவிட் காரணமாக இன்று திருச்சியில் அவர் பணியாற்றும் கார் நிறுவனத்தில் மிரட்டப்பட்டார். யூ டியூப் பதிவர் துரைமுருகன் மற்றும் சிலர் கூட்டாக சென்று வினோத்தை மன்னிப்பு கேட்கும்படி மிரட்டி உள்ளனர். அதோடு அவரின் அலுவலகத்தின் வெளியே நின்று கூச்சல் எழுப்பி உள்ளனர்.

10க்கும் அதிகமான நபர்களை அழைத்து வந்த யூ டியூப் பதிவர் துரைமுருகன் வினோத்தை மன்னிப்பு கேட்க சொல்லி அதை வீடியோ எடுத்துள்ளார். இனிமேல் இதுபோல டிவிட் செய்ய கூடாது என்று மிரட்டி உள்ளனர். இந்த வீடியோ எடுக்கப்பட்ட பின் வினோத்தின் டிவிட்டர் கணக்கும் முடக்கப்பட்டது.
இந்த சம்பவம் இன்று இணையத்தில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. கார் ஊழியரை பட்ட பகலில் இப்படி கும்பலாக சென்று பலர் மிரட்டியது பெரிய அளவில் சர்ச்சையானது. இணையத்தில் பலர் உடனே இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் ஊழியரை மிரட்டியதாக வைக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வினோத் என்ற கார் ஊழியரை மிரட்டிய சரவணன், வினோத், சந்தோஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 7 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.