தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை தலைமையில் மின்துறை சார்ந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அதிரையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்று அதிரையில் நிலவி வரும் மின்துறை சார்ந்த குறைகளை எம்எல்ஏ கா. அண்ணாதுரையிடம் கோரிக்கையாக முன்வைத்தனர். அதன்படி அதிரையில் நிலவி வரும் மின்பற்றாக்குறையை போக்க, 110KV துணை மின் நிலையப்பணிகள் ஒரு வருடத்தில் முழுமையாக முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.
மேலும் அதிகமான மின்அழுத்தம் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர் ஏற்படுத்தப்படும் என்றும், இரவு நேரங்களில் செயல்படாமல் பல நாட்களாக முடங்கி கிடக்கும் அதிரை மின்வாரிய தொலைபேசி எண் சரிவர இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் உறுதி அளிக்கப்பட்டது.
முன்னதாக அதிரை சுப்பிரமணியர் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றியை எம்எல்ஏ கா. அண்ணாதுரை திறந்து வைத்தார். அப்போது அதிரை திமுகழகத்தினர், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.









