தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிரை – பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.45 புறப்படும் ரயில்(வண்டி எண் 06041) எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம்(அதிகாலை 4.45 மணி), பட்டுக்கோட்டை (அதிகாலை 5.03 மணி), பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேஸ்வரத்திற்கு திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சென்று சேருகிறது.
மறுமார்க்கத்தில் 24/10/2022 திங்கட்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு(வண்டி எண் 06042) புறப்பட்டு மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை(இரவு 9.05 மணி), அதிராம்பட்டினம்(இரவு 9.21 மணி), திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் போர்ட், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 6.20 மணியளவில் தாம்பரம் சென்று சேருகிறது.
இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கிவிட்டது. ஆகையால் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளும் பட்சத்தில், வரும் காலங்களில் திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும் வாய்ப்புகள் உள்ளன.

