தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் – ராமேஸ்வரம் – தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் – 06041/06042) திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் அதிரை வந்த சிறப்பு ரயிலில், அதிரையர்கள் பலர் வந்திறங்கினர்.
அதேபோல் மறுமார்க்கமாக நேற்று மாலை 4.30 மணியளவில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9.30 மணியளவில் அதிராம்பட்டினம் வந்தது. தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை இன்றுடன் முடிவதால், அதிரையர்கள் நூற்றுக்கணக்கானோர் ராமேஸ்வரம் – தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதனால் அதிரை ரயில் நிலையம் முழுவதும் பயணிகள் மற்றும் அவர்களின் உறவினர்களால் நிரம்பி காணப்பட்டது.
இந்த ரயிலில் பயணம் செய்வதற்காக வந்த பயணிகள் பலரும், இந்த சிறப்பு ரயில் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளதாகவும், அதேசமயம் சென்னையில் இருந்து திருவாரூர்-காரைக்குடி மார்க்கத்தில் தினசரி ரயிலை இயக்கினால், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, மதுக்கூர், மல்லிபட்டினம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது ரயில் பயணிகளின் கோரிக்கை மட்டுமல்லாது, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துபேட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.




