புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைப் பார்வையிட வரும் டிச. 19 ஆம் தேதி வருகிறார் பிரதமர் மோடி. இதனை தமிழக பாஜக., தலைவர் தமிழிசை உறுதி செய்து செய்தியாளர்களிடம் கூறினார்.
வரும் 19ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் பிரதமர் மோடி, அண்மையில் வீசிய ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார். குமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, தூத்தூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து, அந்தப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட கேரளத்தின் திருவனந்தபுரம் மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி பகுதிகளை அவர் பார்வையிட வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, கன்னியாகுமரி பகுதிக்கு காங்கிரஸின் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் அண்மையில் வந்து சென்றதால்தான் பிரதமர் மோடியும் வருகிறாரா என்று கேட்டதற்கு, ராகுல் காந்தி வந்து சென்றதற்கும் பிரதமர் வருகை தரவுள்ளதற்கும் எத்தத் தொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
மக்கள் மீதுள்ள அக்கறையினால்தான் பிரதமர் இந்தப் பகுதிகளைப் பார்வையிட்டு நிவாரணம் வழங்க தகுந்த மேல் நடவடிக்கை எடுப்பார் என்றும், அவரின் வருகை உறுதியாகியுள்ளது, ஆனால் பயண திட்ட விவரங்கள் தெரியவில்லை.. என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
முன்னதாக புயல் நேரத்தில், உடனடியாகக் களத்தில் இறங்கி, தனது தொகுதி என்பதாலும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். மேலும், மீனவர்கள் பலர் காணாமல் போன விவகாரத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தொடர்பு கொண்டு உதவிடக் கோரினார்.அதை அடுத்து, பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக குமரி மற்றும் திருவனந்தபுரத்துக்கு வந்து, மீனவர்களைச் சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, கடற்படையினரின் பணிகளை நேரில் இருந்து கவனித்தார்.
இதன் பின்னர், தங்கள் பகுதிகளை முதல்வர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று அந்தப் பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்தின் புயல் பாதித்த பகுதிகளைச் சென்று பார்வையிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.