செகந்திராபாத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வந்தது. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த இந்த சிறப்பு ரயிலுக்கு, பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளில் இருந்து சென்னையில் இருந்து வருவதற்கும், சென்னை செல்வதற்கும் நேரடி ரயிலாக இந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இருந்து வந்தது.
கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் இந்த சிறப்பு ரயில் சேவை முடிவடைந்த நிலையில், தற்போது செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே மேலும் ஒரு மாதத்திற்கு சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ரயில் செகந்திராபாத் – ராமநாதபுரம் வாரம் ஒருமுறை சிறப்பு ரயிலாக(வண்டி எண் : 07695, 07696) இயக்கப்படவுள்ளது. ஏற்கனவே இயங்கிய அதே நேரம், கால அட்டவணைப்படியே இந்த ரயில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவும் ஆரம்பமாகிவிட்டது.
இந்த சிறப்பு ரயிலை நீட்டிப்பு செய்த தெற்கு ரயில்வே, திருச்சி கோட்ட மேலாளர் மனிஷ் அகர்வால், திருச்சி முதுநிலை கோட்ட மேலாளர் ஹரிகுமார், நீட்டிப்பு செய்ய தொடர் முயற்சி செய்த பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்க தலைவர் ஜெயராமன், செயலாளர் விவேகானந்தன் மற்றும் காரைக்குடி-திருவாரூர் ரயில் பாதையில் இயங்கும் அனைத்து ரயில் பயணிகள் சங்கங்களுக்கும், பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

