
27 வார்டுகளை உள்ளடக்கிய அதிரை நகராட்சியின் புதிய நகர்மன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைந்தது. இந்நிலையில், தற்போது நகர்மன்ற கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பதனை வெகுஜன மக்களின் பார்வைக்கு தெரிவிப்பது இல்லை ? மக்களின் பிரதிநிதிகளான கவுன்சிலர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக நகர்மன்ற கூட்ட தீர்மானங்களை https://www.tnurbantree.tn.gov.in/adirampattinam/council-resolution-2/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முறையாக அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் அதிரை நகர் மன்ற தீர்மானங்களில் சிலவற்றை அதில் காண கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான கூட்ட தீர்மானங்கள் மட்டுமே இந்த அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் நகர்மன்ற கூட்டங்கள் நடைபெற்றதா? என்கிற கேள்வி மக்கள் மத்தியில் நிலவுகிறது. அவ்வாறு கூட்டங்கள் நடைபெற்று இருக்கும் பட்சத்தில் மூன்று மாதங்களாக தீர்மான விபரங்கள் ஏன் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
நகராட்சி எல்லையில் நடைபெற கூடிய பல லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் நகர்மன்ற கூட்ட தீர்மானங்களில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.