அதிரை நகராட்சியின் கடந்த ஓராண்டு செயல்பாடு குறித்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் கருத்து கேட்பு நடத்தியது. வெளிப்படையாக நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பில் மொத்தம் 262பேர் பங்கேற்றனர். அதில் 58% மக்கள் அதிரை நகராட்சியின் செயல்பாடு திருப்தி இல்லை என தெரிவித்துள்ளனர். அதேசமயம் வெறும் 25% பேர் மட்டுமே நகராட்சியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகவும் 17% பேர் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர் முகம்மது சரபுதீன், அதிரையை எதை வைத்து நகராட்சி என்று அறிவித்தார்கள்? மக்கள் தொகை அதிகரிப்பு? இன்றுவரை புரியவில்லை! வரிகள் தான் மிக அதிகமாக போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கருத்திட்ட விக்னேஸ்வரன் கண்ணன், வரி உயர்வுதான் மிச்சம் .. சாலை வசதி மிக மிக மோசம் என்று நச் என தெரிவித்துள்ளார்.
பைசல் அகமது தனது கருத்தில் “நகராட்சி தினமும் செயல்படுகின்றது. ஆனால் பணிகள் செயல்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

பேருக்குத்தான் அதிராம்பட்டினம் நகராட்சி செயலில் ஒரு பேரூராட்சியில் செய்யும் பணி அளவுக்கு கூட செய்யவில்லை. சாலை அமைத்து தருகிறார்கள் ஆனால் முழுமையாக அமைத்து தரவில்லை. கால்வாயில் சரியான முறையில் தூர்வாரப்படுவதில்லை, சாலையில் இருபுறமும் கால்வாய் இருந்தால் ஒருபுறம் மட்டும் சுத்தம் செய்து விட்டு மறுபுறத்தை அப்படியே வைத்துவிட்டு செல்கிறார்கள். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இல்ல அந்த வார்டில் நண்பர்களோ கவனிக்கவில்லை. தெரு விளக்குகள் அவ்வப்போது சரியான சமயத்தில் சரியான சமயம் என்று கூட சொல்ல முடியாது சில சமயங்களில் அந்த சாலைகள் முழுவதுமே இருட்டாக காணப்படுகிறது, இன்னும் பல இருப்பதாக ஓ.கே.எம். பைசி பின் சிகாபா தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.
இவ்வாறு மக்கள் கூறும் கருத்துக்களை செவிமெடுத்து கேட்டு தன் செயல்பாட்டை மேம்படுத்துமா அதிரை நகராட்சி? பொறுத்திருந்து பார்ப்போம்.