Home » நட்சத்திரப் பார்வை(Stargazing)

நட்சத்திரப் பார்வை(Stargazing)

0 comment

வானில் மின்னும் விண்மீன்கள்
வாழ்த்தும் அழகுக் காட்சிகளை
வேனிற் காலப் பகற்கழிந்து
வீசும் இரவில் கண்டுகொண்டேன்

மின்னல் தோறும் சொல்லுகின்ற
மீளும் காதல் கதைகளைத்தான்
என்னுள் உருகி உணர்கின்றேன்
ஏனோ அறியேன் காரணத்தை

குளித்து மகிழ்ந்த உணர்வுகளை
குவியல் விண்மீன் கூட்டங்கள்
அளித்து என்னை அனுப்பியது
அந்தச் சுகத்தில் கண்ணயர்ந்தேன்

அள்ளித் தெளித்த கோலங்கள்
அழகுக் கலையின் வடிவங்கள்
தெள்ளத் தெளிவாய்ப் பாருங்கள்
தெரியும் இயற்கை ஒவியங்கள்

காணும் போது பால்வீதி
காணக் கிடைத்த பேறென்பேன்
வேணும் வேணும் என்றென்னை
வேட்கை யூட்டும் வெறியென்பேன்

எண்ணி விடவே இயலாத
இந்தக் கூட்டம் அற்புதமே
கண்ணிற் குளிர்ச்சி தருகின்ற
கண்ணில் இட்ட மருந்தாக

நெருங்கிப் பிடிக்க ஆசையுண்டு
நெஞ்சம் ஏங்கித் தவித்தாலும்
அருகில் இல்லை என்றறிந்து
அமைதி கொண்டேன் விண்மீனே

ஆக்கம்:
கவியன்பன் கலாம்

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter