அடுத்த ஆண்டு மே மாதத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடியின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் மல்லிகர்ஜுன் கார்கே தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணியும் நேருக்கு நேர் எதிர்கொள்ள இருக்கின்றன. இந்த சூழலில் தமிழகத்தில் 1979ம் ஆண்டு இந்திரா காந்தி போட்டியிட வேண்டுமென காங்கிரசார் விரும்பிய தஞ்சாவூர் மக்களவை தொகுதியை இந்தமுறை மீண்டும் அக்கட்சி குறிவைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டாவில் காங்கிரசை வலுப்படுத்த இந்த வியூகம் சரியானதாக இருக்கும் என காங்கிரசார் நம்புகின்றனர்.
ஏனெனில் காங்கிரசின் கோட்டையாக இருந்த பட்டுக்கோட்டையை கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுகவுக்கு தாங்கள் விட்டுக்கொடுத்ததை சுட்டிக்காட்டும் அக்கட்சியினர், இதற்கு பரிகாரமாக தஞ்சாவூர் மக்களவை தொகுதியை காங்கிரசுக்கு திமுக கொடுப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும் எனவும் கருதுகின்றனர். இந்த சூழலில் தஞ்சாவூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் பன்னெடுகாலமாக இருந்த இந்திரா காந்தி மணிமண்டபத்தை நகராட்சி நிர்வாகம் தரைமட்டமாக்கி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
கடந்த நகர்மன்ற துணை தலைவர் தேர்தலில் திமுக தலைமையால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அந்த பதவியை தஞ்சாவூர் சிட்டிங் எம்.பி-யின் தீவிர ஆதரவாளர் கைப்பற்றினார். தற்போது அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் இந்திரா காந்தியின் மணிமண்டபம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் தஞ்சாவூர் மக்களவை தொகுதியை காங்கிரஸ் கேட்க கூடாது என்பதற்கான எச்சரிக்கை சமிக்கையாகவே இந்திரா காந்தியின் மணிமண்டபம் இடிப்பு பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்னரே காங்கிரசின் உயரிய தலைவரும், நாட்டின் முதல் பெண் பிரதமரும், நேருவின் மகளும், ராகுல் காந்தியின் பாட்டியுமான இந்திராவின் மணிமண்டபத்தை அரசியல் உள்நோக்கம் கொண்டு இடித்து தள்ளி இருப்பது காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இடிக்கப்பட்ட இடத்திலேயே இந்திரா காந்தியின் மணிமண்டபத்தை நகராட்சி நிர்வாகம் கட்டித்தர வேண்டும் எனவும் இல்லையேல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்த விவகாரத்தில் தலையிட நேரிடும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது திமுக சார்பில் தஞ்சாவூரில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு சொந்த கட்சியிலேயே சிலரின் உள்ளடி வேலைகளால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.