390
அன்னை தந்தை இல்லாமை
அருமை கல்வி கல்லாமை
முன்னோர்ப் பெருமை புரியாமை
முயற்சி செய்யத் தெரியாமை
இன்னும் துன்பம் எதுவென்றால்
இளமை வயதில் விதவையன்றோ
துன்பம் கண்டு துவளாமால்
துணிவு கொண்டு வாழ்வாயே!
வாழ்வில் துன்பம் நீளாது
வறுமை என்றும் தங்காது
தாழ்வு மனம்தான் உன்னெதிரில்
சமரைக் காட்டும் உன்னெதிரி
ஆழ்ந்தச் சிந்தனை வழிகாட்டும்
ஆளும் திறமை நெறியூட்டும்
மூழ்க வைக்கும் துன்பங்கள்
முயன்று விரட்ட நீங்கிடுமே!
நீங்காத் துன்பம் ஏதுமில்லை
நின்று வென்றால் தீதுமில்லை
வாங்கும் கடனால் தொல்லைகள்
வட்டித் தீட்டும் எல்லைகள்
தாங்க முடியாத் துன்பங்கள்
தானாய் வருமா இன்னல்கள்?
ஏங்க வைக்கும் தீமைகளாம்
எல்லாம் உன்றன் கைகளாலே!
ஆக்கம்:
கவியன்பன் கலாம்