271
அன்புமிக்கப் பிடியிறுக்கம் அமைதியான அரவணைப்பில்
ஒன்றாக அரவணைத்தால் உளம்நிறைவு தொடர்ந்திருக்கும்
மென்மையுள்ள பிடியிறுக்கம் விரைவாகப் பலனைத்தரும்
துன்பங்கள் துயரங்கள் துடைத்தெறியும் மருந்தன்றோ?
நெஞ்சோடு அணைக்கின்ற நெகிழ்ச்சியின் பிடியிறுக்கம்
பஞ்சாகப் பறந்துபோகும் படுகின்ற வருத்தங்கள்
அஞ்சாதே உனக்குநான் அரவணைப்பில் விடைசொல்லும்
எஞ்சாமை பெறுகின்றேன் ஈருடலின் பிடியிலன்றோ?
நேர்த்திமிகு அரவணைப்பில் நினைவுகளின் இனிமையுண்டு
போர்த்திருக்கும் கனலைப்போல் புறக்கணிக்க இயலாது
வார்த்தைகளில் துடிப்புகளை வளர்த்தெழுத முடியாது
சார்ந்திருத்தல் இருவருமே சரணடைந்தோம் இறுக்கமன்றோ?
*எஞ்சாமை* = முழுமை
ஆக்கம்:
கவியன்பன் கலாம்