
சென்னை தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரயில் அதிரையில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயில் மறியல் குறித்து ஆலோசிக்க தோழமை கட்சிகளுக்கு அதிரை நகர மனிதநேய மக்கள் கட்சி அழைப்புவிடுத்தது. அக்கட்சியின் நகர அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.நெய்னா முகம்மது (நகர தலைவர், மமக), இணை ஒருங்கிணைப்பாளர் கோட்டூரார் ஹாஜா முகைதீன் (நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகள் மற்றும் அனைத்து முஹல்லா நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனையடுத்து அதிரையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்த ஏதுவாக அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், வியாபார சங்கங்கள் என அனைவரையும் உள்ளடக்கி வலுவான கூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்து முதற்கட்டமாக அதற்கான குழுவையும் நியமித்தனர். இந்த குழு அனைத்து தரப்பையும் ஒருங்கிணைப்பதுடன் அடுத்தகட்ட முன்னெடுப்புகள் குறித்தும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
