
அதிரை முன்னாள் சேர்மனும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளருமான எஸ்.எச்.அஸ்லம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 2011ம் ஆண்டு அதிரை பேரூர் மன்ற பெருந்தலைவராக மக்கள் தன்னை தேர்ந்தெடுத்ததை குறிப்பிட்ட எஸ்.எச்.அஸ்லம், அதனால் அன்றைய அதிமுக அரசு அதிரைக்கான வளர்ச்சி திட்டங்களை கிடப்பில் போட்டதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிரையில் 60% பகுதிகளில் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டிய அவர், அதிரையில் பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும் விபத்து மற்றும் காற்று மாசுக்கு காரணமான அதிரை சாலைகளில் தேங்கி கிடக்கும் மணல்களை அகற்ற அதிரை நகராட்சிக்கு நவீன இயந்திரம் வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் நேருவுக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் எஸ்.எச்.அஸ்லம் குறிப்பிட்டுள்ளார். இவர் வலியுறுத்தும் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்பட்சத்தில் அதிரையின் எதிர்காலம் ஒளிரும் என்பதில் மாற்று கருத்தில்லை.