கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான இராம.குணசேகரன் தலைமையிலான கும்பல் அபரிக்க முயன்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிரையை அதிர வைத்தது. இந்த பிரச்சனை அடங்குவதற்குள் பழைய இமாம் ஷாஃபி பள்ளி இயங்கி வந்த இடத்தையும் சட்டவிரோதமாக அதிகாலையிலேயே வருவாய்த்துறையினர் இல்லாமல் துப்புரவு பணியாளர்களை மட்டும் வைத்து சீல் வைத்ததுடன் யோகி அரசு பாணியில் புல்டோசர் கொண்டு முஸ்லீம் சிறுபான்மை பள்ளியை குணசேகரனின் தூண்டுதலின் பேரில் நகராட்சி நிர்வாகம் இடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் பெரிதும் மதிக்க கூடிய மத குருவான இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயர் அடங்கிய பலகையை உடைத்து குப்பை வண்டியில் வீசியதும் முஸ்லீம்களின் மனதை புண்படுத்தின.
இதனால் வெடித்த மக்களின் தன்னெழுச்சி போராட்டம் தமிழ்நாடு முழுவதும் பேசும் பொருளானது. மமக தலைவர் ஜவாஹிருல்லா, ஐமுமுக தலைவர் ஹைதர் அலி, மஜக தலைவர் தமீமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக,நாதக உள்ளிட்ட இதர கட்சியின் தலைவர்கள் நேரடியாக போராட்ட களத்திற்கு வந்து இமாம் ஷாஃபி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் தலையிட்ட தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், சட்டவிரோத சீலை அகற்றி 11 நாட்கள் நீடித்த தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.
இதனிடையே குணசேகரனின் இந்த செயலால் சிறுபான்மை வாக்குகள் திமுகவுக்கு கிடைக்காமல் போகும் அபாயம் இருப்பதை உணர்ந்த அக்கட்சியின் தலைமை, கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அதிராம்பட்டினம் திமுக நிர்வாகத்தை கிழக்கு மேற்கு என்று இரண்டாக பிரித்து குணசேகரனின் பவரை குறைத்ததுடன் மேற்கு நகரத்திற்கு முன்னாள் சேர்மன் அஸ்லத்தை செயலாளராக நியமித்து டுவிஸ்ட் வைத்தது.
திமுக தலைமையின் இந்த முடிவை அதிரை சிறுபான்மை மக்களும் வரவேற்றனர். இந்த சூழலில் அர்டா அமைப்புக்கு எதிராக மக்களின் வரிப்பணம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தொடுத்த வழக்கை சமீபத்தில் நகராட்சி நிர்வாகம் வாபஸ் பெற்றது குணசேகரன் தரப்புக்கு பெரும் தோல்வியாக கருதப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளும் குணசேகரனின் வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கின. அஸ்லம் தலைமையிலான மேற்கு நகரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக உதயசூரியனுக்கு 89.5% வாக்குகள் கிடைத்த சூழலில் குணசேகரன் தலைமையிலான கிழக்கு நகரத்தில் வெறும் வெறும் 56% வாக்குகள் மட்டுமே உதயசூரியன் பெற்றது. அதிலும் சிறுபான்மையினர் அல்லாத பகுதிகளில் திமுகவுக்கு சொற்ப வாக்குகள் மட்டுமே கிடைத்திருப்பதையும் அக்கட்சி தலைமை கவனிக்காமல் இல்லை.
இந்தநிலையில் கட்சியிலும் மக்கள் மத்தியிலும் தொடர்ந்து சரிந்து வரும் தனது இமேஜை சரி செய்ய வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த குணசேகரன், கடந்த சில தினங்களுக்கு முன்பு அர்டா அமைப்பின் ஷிஃபா மருத்துவமனை வளாகத்தில் லயன்ஸ் சங்கம் நடத்திய கண் பரிசோதனை நிகழ்வுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் பொன்னாடை போற்றி வரவேற்று இருக்கிறார்கள்.
இதனை புகைப்படம் எடுத்து தங்களுக்கு ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் பொன்னாடை போற்றி வரவேற்றதை போன்று பொய்யான செய்தியை குணசேகரன் தரப்பு பரப்பி வருகிறது. அர்டா அமைப்பால் சரிந்த தனது அரசியல் வாழ்க்கையை அர்டா அமைப்பை வைத்தே சரி செய்ய குணசேகரன் முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு குறித்து ஷிஃபா நிர்வாகத்திடம் பேசினோம், “ ஷிஃபா மருத்துவமனை என்பது அனைத்து மக்களுக்குமானது. இங்கு எதிரியே வந்தாலும் அவருக்கான உரிய சிகிச்சை அளிப்பது எங்களது கடமை. அந்த அடிப்படையிலேயே லயன்ஸ் சங்க மருத்துவ முகாமுக்கு வந்தவர்களையும் நாங்கள் அனுகினோம். நமது ஷிஃபா நிர்வாகத்தின் சார்பில் யாருக்கும் நாங்கள் பொன்னாடை போற்றி வரவேற்கவில்லை. அது லயன்ஸ் சங்கத்தின் நிகழ்ச்சி தாங்கள் அவர்களிடம் பேசுவதே சரியாக இருக்கும். இன்ஷா அல்லாஹ் உலக தரத்தில் அதிரை மக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான எங்களது பயணம் தொடரும்.” என்று விளக்கினர்.
இதனையடுத்து கண் பரிசோதனை முகாமை ஏற்பாடு செய்த லயன்ஸ் சங்க நிர்வாகிகளை அணுகி விளக்கம் கேட்டோம். அவர்கள் அளித்த பதில் “ கண் பரிசோதனை முகாமுக்கு எந்த அரசியல்வாதிகளுக்கும் நாங்கள் தனிப்பட்ட முறையில் அழைப்புவிடுக்கவில்லை. நிகழ்வுக்கு வந்தவர்களை நாகரிகம் கருதி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பொன்னாடை போற்றி வரவேற்றம். இதில் தேவையில்லாமல் அரசியலை புகுர்த்த வேண்டாம். என்று முடித்துக்கொண்டனர்.
எந்த இடத்தில் தொலைத்தோமோ அந்த இடத்தில் தான் தொலைத்ததை தேட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அதன்படி தனது அரசியல் வாழ்க்கை சறுக்க காரணமாக இருந்த அர்டா, பழைய இமாம் ஷாஃபி உள்ளிட்ட விவகாரங்களில் தனது தவறை உணர்ந்து அவற்றை திருத்திக்கொண்டால் மகிழ்ச்சியே என்று விபரம் அறிந்தவர்கள் கருதுகின்றனர்.