தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார். இதனையடுத்து, புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தனிச் செயலாளர் – 1 ஆக பணியாற்றி வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 50வது தலைமைச் செயலாளராக இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.
முருகானந்தம் ஐஏஎஸ் 1991 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பிஜி கணினி அறிவியல், ஐஐஎம் லக்னோவில் எம்பிஏ படிப்புகளை இவர் படித்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இவர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். அதோடு பிடிஆர் நிதி அமைச்சராக இருந்த போது அவருக்கு கீழ் இவர் நிதித்துறை செயலாளராக இருந்தார். கிட்டத்தட்ட இவர்தான் பிடிஆரின் ரைட் ஹேண்ட். பட்ஜெட்டை உருவாக்கியதில் கடந்த 2 வருடங்களில் இவரின் பங்கு முக்கியமாக கருதப்பட்டது.
பழுத்த அனுபவங்களை கொண்ட இவர், பல்வேறு துறைகளில் திறம்பட பணியாற்றியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில் தொழிற்துறையின் முதன்மைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய இவர், இன்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.