Home » வரலாறு காணாத வறட்சியால் தேங்காய் விளைச்சல் குறைவு விலை கிடுகிடு உயர்வு!!

வரலாறு காணாத வறட்சியால் தேங்காய் விளைச்சல் குறைவு விலை கிடுகிடு உயர்வு!!

0 comment

பட்டுக்கோட்டை: இந்தியாவில்  தேங்காய் உற்பத்தியில் கேரளா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும்  உள்ளது. வருங்காலத்தில் தமிழகம் முதலிடத்தை பெறும் அளவுக்கு தென்னை சாகுபடி  அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 3.1 லட்சம் ஹெக்டேரில் (7.75  லட்சம் ஏக்கர்) தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக தஞ்சை  மாவட்டத்தில் 45,000 ஹெக்டேரில் (1,12,500 ஏக்கர்) தென்னை சாகுபடி  நடக்கிறது. அதிலும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, சேதுபாவாசத்திரம்  உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 37,000 ஹெக்டேரில் (92,500 ஏக்கர்) தென்னை  சாகுபடி நடக்கிறது. இந்தாண்டு வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டதால்  தேங்காய் உற்பத்தி மிகவும் குறைந்ததால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.  

கோவை, பொள்ளாச்சிக்கு அடுத்ததாக தஞ்சை மாவட்டத்தில் தென்னை சாகுபடி நடந்து  வருகிறது. கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தியாகும் தேங்காய் அளவு  பெரிதாக இருந்தாலும் டெல்டா மாவட்டங்களில் உற்பத்தியாகும் தேங்காய்களில்  தான் ருசி அதிகம். தஞ்சை மாவட்டம் தேங்காய்களில் எண்ணெய்சத்து அதிகம்  இருக்கும் என்பதால் இதன் விலை எப்போதும் அதிகமாக இருக்கும்.  தஞ்சை  மாவட்டத்தில் இந்தாண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் குறைந்து  ஓராண்டாகவே விலை அதிகமாக உள்ளது. ஒரு தேங்காய் மொத்த விற்பனையில் ரூ.18  முதல் ரூ.21க்கும், சில்லரை விற்பனையில் ரூ.22 முதல் ரூ.25 வரை  விற்கப்படுகிறது. அதேபோல் ஒரு கிலோ கொப்பரை கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில்  ரூ.90 வரை விற்கப்பட்டது. 

தற்போது ஒரு கிலோ கொப்பரை ரூ.135 முதல் 140 வரை  விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரை ரூ.65க்கு  கொள்முதல் செய்கிறது. பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் நுகர்வோருக்கு தேங்காய்  அதிகளவு தேவைப்படும். இதன் காரணமாக இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  இந்த தேங்காய் விலை உயர்வால் தென்னை விவசாயிகளுக்கு லாபம் இல்லை. ஏனெனில்  தேங்காய் விலை உயர்வு ஏற்படும்போது உற்பத்தி குறைவால் விற்பனை செய்வதற்கு  விவசாயிகளிடம் தேங்காய் இல்லை. அதேபோல் கொப்பரை கொள்முதல் விலையும் தற்போது  அதிகரித்துள்ளது. இதற்கும் தேங்காய் விளைச்சல் குறைவு தான் காரணம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter