தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் வருவாய் கிராமம் என்பது வருவாய் சரகத்தின் தலைமையிடமாகவும் நகராட்சியாகவும் திகழ்கிறது. அதேசமயம் அதிராம்பட்டினம் வருவாய் கிராமத்தின் நிர்வாக அலுவலரின் அலுவலகம் மழவேனிற்காடு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக அதிராம்பட்டினம் மக்கள் வெகுதூரத்தில் உள்ள மழவேனிற்காட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. சுமார் 3கி.மீ. தொலைவில் உள்ள அந்த அலுவலகத்திற்கு செல்ல போதிய பொது போக்குவரத்து வசதியும் இல்லை.
இந்நிலையில் மக்கள் தொகை அதிகம் இருக்க கூடிய அதிராம்பட்டினம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தார் சுகுமாரிடம் முன்னாள் சேர்மனும் மேற்கு நகர திமுக செயலாளருமான அஸ்லம் மனு அளித்தார். அப்போது அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அமைக்க வேண்டிய அவசியம் குறித்தும் தாசில்தாரிடம் விளக்கி கூறினார். மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நகர செயலாளர் வழக்கறிஞர் முகம்மது தம்பி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
