திருப்பூர்: பஸ் கட்டண உயர்ந்தது தெரியாமல் வழக்கம் போல் நேற்று பயணம் மேற்கொண்ட பயணிகள் குறைவான கட்டணம் வைத்திருந்ததால் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். இதனால் பேருந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
டீசல் கட்டண உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு ஆகியவற்றால் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி நேற்று முதல் பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
வழக்கத்தை காட்டிலும் இரண்டு மடங்கு கட்டண உயர்த்தப்பட்டுள்ளது. பஸ் கட்டண உயர்வு குறித்த தகவல் தெரியாமல், வழக்கம் போல் பயணம் செய்ய வந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் வழக்கமாக பஸ்சிற்கு ஆகும் டிக்கெட் கட்டணத்துடன் பஸ்சில் ஏறினர். அவர்கள் வழக்கமாக கட்டணத்தை கொடுத்து டிக்கெட் கேட்டனர்.
ஆனால் நடத்துநர்கள் உயர்த்தப்பட்ட கட்டணத்தைத் தருமாறு கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தாங்கள் குறைவான கட்டணம் மட்டுமே கொண்டு வந்திருப்பதாகவும் ,மேற்கொண்டு பணம் இல்லை என்றும் கூறினர். ஆனால் இதை நடத்துநர்கள் ஏற்கவில்லை.
இதையடுத்து போதிய கட்டணம் இல்லாததால் பயணிகளை பாதி வழியிலேயே இறக்கிவிட்டனர். இதனால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர். பெண்கள் ,வயதானவர்கள் என்றும் பாராமல் நடுவழியில் இறக்கவிட்டதால் செய்வதறியாது திகைத்தனர்.
மேலும் கட்டண உயர்வை அரசு திடீரென உயர்த்தியிருப்பது தவறு என்றும் ஏழை ,எளிய மக்களால் இத்தகைய அளவுக்கு கட்டணம் கொடுத்து செல்லமுடியாத நிலை உள்ளது என்றும் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.