காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு ரயில்களை இயக்க கடந்த 15 வருடங்களாக பல்வேறு முயற்சிகளை அதிரை அகமது அலி ஜாபர் எடுத்து வருகிறார். குறிப்பாக இந்த வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை தொடர்ந்து தற்போது இந்த வழித்தடத்தில் லோக்கல் ரயில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ரயில்களை இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அதிரை அகமது அலி ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்களவை தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தபோது காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு ரயில்களை இயக்க கடந்த மே 7ம் தேதியே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதாக சுட்டிக் காட்டினார். இதனால் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்ததாகவும், இருப்பினும் அவ்வாறு நிகழவில்லை என்றார்.
எனவே காரைக்குடி-மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ரயில்களை இயக்க வேண்டும் என பிரதமர், ரயில்வே துறை அமைச்சர், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் வெளிநாடு வாழ் அதிரையர்கள் வலியுறுத்த வேண்டும் என அதிரை அகமது அலி ஜாபர் கோரிக்கை விடுத்துள்ளார்.








