அதிரை SSM குல் முஹம்மது நினைவு 24 ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இத்தொடரில், வெளியூர்களில் இருந்து பல்வேறு அணிகள் பங்கு கொண்டு விளையாடி வந்த நிலையில், இத்தொடர் இப்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
3 ஆண்டுகளுக்கு பிறகு இத்தொடரில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அதிரை AFFA அணி புதுவித உற்சாகத்துடன், ARUL 7’S தஞ்சாவூர் அணியுடன் இன்று முதலாவது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தியது.
விறுவிறுப்புடன் துவங்கிய முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணியினரும் தங்கள் அணி சார்பாக முதலாவது கோல் அடிக்க மும்முரம் காட்டினர். இரு அணியினருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைத்தும், கோல் கம்பத்தை நோக்கி அடித்த KICK – குகள் எல்லாம் கோல் ஆக மாறாமல் மிஸ் ஆகின. இதனால் முதல் பகுதி நேர அட்ட முடிவில், இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் சமநிலையில் முடிந்தது.
இதன்பிறகு நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், முதல் கோல் வெற்றிக்கானதாக இருக்குமா என்கிற அளவிற்கு இரு அணியினரின் ஆட்டத்திறன்கள் தீவிரமாகவே இருந்தது. இருப்பினும் இரண்டாவது பகுதி நேர முடிவிலும், இரு அணிகளால் கோல் ஏதும் போடமுடியாமல் ஆட்டம் மீண்டும் சமநிலையில் முடிந்தது.
வெற்றியை தீர்மானிப்பதற்காக தொடர்ந்து நடைபெற்ற TIE – BREAKER ல் அடிக்கப்பட்ட அத்தனை Shoot – களும் இரு அணியின் வீரர்கள் கோலாக மாற்றியதால், இந்த முதலாவது அரையிறுதி போட்டி முற்று பெறாமல் சமநிலையிலேயே தொடர்ந்து கொண்டிருந்தது. இதனால் ரசிகர்கள் பரவசமடைந்து கரவொலிகளை எழுப்பினர்.
மீண்டும் டை – பிரேக்கர் முறை தொடரும் என நடுவர்கள் தெரிவித்ததால், இரு அணிகளும் மாறி மாறி மீண்டும் கோல் அடித்து கொண்டே இருந்ததால், போட்டியின் நடுவர்கள் வெற்றியை தீர்மானிக்க TOSS முறையை தேர்ந்தெடுத்தனர். இதில் ARUL 7’S தஞ்சாவூர் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அதிரை SSMG தொடரில் மூன்று வருடங்களுக்குப் பிறகு அரையிறுதியில் களம் கண்ட அதிரை AFFA அணி பல ஜாம்பவான் அணிகளுக்கு சவால் விடும் வகையில் தனது ஆட்டத்திறனையும், போட்டியினிடையே செய்யும் நுணுக்கங்களையும் இத்தொடர் முழுவதிலும் சிறப்பாகவே கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








