Saturday, September 13, 2025

ஹாஜி ஹாபிஸ் மு.அ.மு. முகம்மது அப்துல்லாஹ் (துபாய்)அவர்களின் நோன்பு பெருநாள் வாழ்த்து செய்தி!

spot_imgspot_imgspot_imgspot_img

ஈதுல் ஃபித்ர் – ஈகைத்திருநாள் எனும் நோன்புப்பெருநாள் சிறப்புகள் :

நோன்புப் பெருநாள்அல்லது ஈகைத் திருநாள் (ஈதுல் ஃபித்ர் அரபு மொழி: عيد الفطر) என்பது இஸ்லாமிய‌ இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமாகிய ரமழான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடப்படுகின்றது. நோன்புப்பெருநாள் என்றும் இது அழைக்கப்படுகின்றது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது திருநாள்/பெருநாள் என்பது பொருளாகும்.


ரமழான் நோன்பு:
இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமழான் முஸ்லிம்களைப் பொருத்தவரையில் முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களின் திருமறையான திருக்குர்ஆன் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக இறைவனிடமிருந்து வானவத்தலைவர் ஜிப்ரயீல் அலைஹிவஸல்லம் அவர்கள் வஹி மூலம் எம்பெருமானார் ரசூலே கரீம் (ஸல்) அவர்களுக்கு வந்து இறங்கியது. ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.


அடிப்படை நோக்கம்:
குறிப்பாக முஸ்லிமுக்கு நோன்பானது ஐம்பெரும் கடமைகளிலில் மூன்றாவது கடமையாகும் (கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்). ஒரு முஸ்லிமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீகப் பயிற்சியாக இது உள்ளது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதுமன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

பெருநாள்:
ரமலான் மாதத்தைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளை குடும்பத்துடன் அனைவரும் புத்தாடை அணிந்து நறுமணங்கள் பூசிக்கொண்டு, நல்ல உணவு வகைகள் பரிமாறப்பட்டு பள்ளிக்குச்சென்று கூட்டாக ஈதுல் ஃபித்ர் பெருநாள் தொழுகையை இமாம் ஜமாத்துடன் தொழுதும், இறைவனிடம் து ஆக்கள் கேட்டும் தொழுகை முறையே முடிந்ததும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி ஆரக்கட்டித்தழுவிக்கொண்டு பரஸ்பரம் வெளிக்காட்டி கொண்டாடுவர். ஒரு மாத காலமாக இறைவன் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து பசித்திருந்தும், தாகித்திருந்தும் புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு நோற்ற முஸ்லிம்கள் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியையும் களிப்பையும் இப்பெருநாள் தினத்தன்று பெறுவர். எப்படி ஒரு மாதம் தன் வியர்வை சிந்தி கடின உழைப்பு செய்த ஒரு கூலித்தொழிலாளிக்கு சம்பளம் மற்றும் கூடுதல் ஊதியம், இதர படிகள் எல்லாம் ஒரு சேர ஒரே தினத்தில் கிடைக்கப்பெற்றால் எவ்வாறு இன்புறுவானோ அதே போல‌ ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு மாத காலம் ரமலான் நோன்பை நோற்று, இறை வணக்க வழிபாடுகள் செய்து இறைவனின் நற்கூலிக்காக ஆவலுடன் காத்திருக்கும் அழகிய தினமே ஈதுல் ஃபித்ர் என்னும் ஈகைத்திருநாளாம் நோன்புப்பெருநாள்.
பெருநாள் தினத்தின் கடமைகள்:
இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் (ஈதுல் ஃபித்ர் மற்றும் ஈதுல் அல்ஹா) நோன்புப் பெருநாளும் ஒன்று. இரு பெருநாள் தினத்திலும் மகிழ்ச்சியுடன் களிக்க இறைவன் வழி செய்துள்ளான். அதே தினத்தை வீண் விளையாட்டிலோ, வீண் கழியாட்டத்திலோ கழிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளது. பெருநாள் தினத்தில் முக்கியமாகப் கீழ்க்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் தெளிவு படுத்தியுள்ளது.
தக்பீர் சொல்லல். பிறை தென்பட்டது முதல் பெருநாள் தொழுகைவரை உள்ள நேரங்களில் ஈதுல் பித்ர் தினத்தில் தக்பீர் என்னும் இறைவனை புகழும் சொற்களை சொல்வது சுன்னத்தாகும்.
இரு பெருநாள் இரவுகளிலும் அதிக நன்மையில் ஈடுபடுதல், உதாரணமாக அதிகமாக சுன்னத்துத் தொழுதல், அல்குர்ஆன் ஓதுதல், திக்ர், ஸலவாத்துக்கள் ஓதல், துஆக் கேட்டல் என்பன.
குளித்து சுத்தமாகிக் கொள்ளல் (நிய்யத்து அவசியம். ஈதுல் பித்ர் சுன்னத்தான குளியை நிறைவேற்றுகிறேன்)
புத்தாடை அணிதல், புத்தாடை இல்லாவிட்டால் சுத்தமான அழகிய ஆடை அணிதல்.
ஆண்கள் மணம் பூசிக் கொள்ளல். வெளியில் செல்லாது வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள் மணம் பூசுதல்.
இயன்றவரை அதிகமாக தர்மம் செய்தல்.
ஸதகத்துல் ஃபித்ர் கொடுத்தல்.
பெருநாள் தொழுகையிலும், குத்பாவிலும் கலந்து கொள்ளல்
இந்த எட்டுக் காரியங்களில் ஸதகத்துல் ஃபித்ர் கட்டாயக் கடமையானது. ஏனையவை அனைத்தும் சுன்னத்தானது.
கடமையான ஃபித்ரா:
தாம் விரும்பி உண்ணும் உண‌வுப் பொருட்களையே பெருநாள் ஃபித்ரா தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் நாடிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது. ஃபித்ரா எனும் தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன், பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்க முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா என்னும் தர்மத்தை கொடுக்கவேண்டும்.
வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நபித்தோழர் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு தனது ஃபித்ரா தர்மத்தை பெருநாளைக்கு முன்பே அனுப்பி வைத்த நிகழ்ச்சி அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் ஃபித்ரா தர்மத்தைக் கொண்டு இப்பெருநாள் தொடங்குவதால் இதற்கு ஈதுல் ஃபித்ர் ஈகைப்பெருநாள் என பெயரானது.
ரமழான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. ஆண்டு முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் முஸ்லிம் சகோதரர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஏழைகளின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக “தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்” ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றைத் தர்மமாகக் கொடுக்கும்படி நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்.
ரமழானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி “தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்” என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி

கடமை:
இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பீன் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.
அளவு:
இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும்.
நாள்:
இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.
பசி தாகத்துடன் நோன்பு வைத்து பின் பெருநாளுக்கு முன் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது என நபி ஸல் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
“மனித நேயம்” என்பதற்கு, ஈகைப்பண்பும் இரக்கச் சிந்தையுமே சிறந்த சான்றுகளாகும். ரமலான் மாதத்தில் நோற்ற நோன்புக்கு ஷவ்வால் முதல் நாள் அன்று விடுமுறை. அன்று நோன்பிருப்பது நபி வழியன்று! மனம் விரும்பிய உணவை ரசித்து சாப்பிட்டு, குடும்பத்தார், உற்றார், உறவினருடன் மகிழ்ந்திருத்தல் அன்றைய நிகழ்வாகும்.

ஆக்கம் தொகுப்பு :

ஹாஜி ஹாபிஸ் மு.அ.மு. முகம்மது அப்துல்லாஹ்,
இமாம் துபை

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img