குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இந்த மசோதா கடந்த வருடம் நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த சட்டம் இந்தியாவின் அரசியலைப்பு சட்டத்திற்கும், இறையாண்மைக்கும், அரசியல் சாசனத்திற்கும் எதிரானது என்று கூறி போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான் இதற்கு எதிராக கேரள அரசு, திமுக, மக்கள் நீதி மய்யம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் வழக்குகள் உட்பட மொத்தம் 144 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் சட்ட பிரிவு 14க்கு எதிராக இந்த சட்டம் இருக்கிறது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, நீதிபதிகள் பிஆர் கவாய், சூர்யா காந்த் ஆகியோர் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் உடனடியாக சட்டத்திற்கு தடை விதிக்க மனுதாரர் தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் உடனடியாக சட்டத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்படாத நிலையில், மொத்தம் 6 முக்கிய உத்தரவுகள் இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சிஏஏவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது. மாறாக மத்திய அரசு இந்த சட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் அளிக்க வேண்டும்.
- மத்திய அரசு 144 மனுக்கள் மீதும் 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் .
- ஐந்தாவது வாரம் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும். இடையில் வரும் சிஏஏ தொடர்பாக வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும்.
- திரிபுரா, அசாம் வழக்குகள் ஒன்றாக இணைக்கப்படும். ஆனால் இந்த 144 மனுக்களுடன் சேர்க்காமல், அந்த வழக்குகள் மட்டும் தனியாக விசாரிக்கப்படும்.
- இந்த வழக்கு தொடர்பாக எந்த மாநில உயர் நீதிமன்றமும் விசாரிக்க கூடாது, உத்தரவிட கூடாது.
- இந்த வழக்கில் நிறைய சட்டம் தொடர்பான அம்சங்கள் இருப்பதால் 144 மனுக்களையும் 5 அல்லது 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வாய்ப்புள்ளது என்று தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.









