அதிராம்பட்டினம் அரசியல் தற்போது மக்களுக்கான அரசியலாக மாறி வருகிறது. முன்பெல்லாம் அரசியலில் ஒருவரை மட்டுமே நம்பி இருந்த காலம், தற்போது மாறி சாமானியர்களும் தெளிவான அரசியல் பேச ஆரம்பித்துவிட்டனர். ஒவ்வொரு வார்டுகளிலும் எவ்வளவு ஓட்டு இருக்கிறது? அதில் உதயசூரியன், இரட்டை இலை, தாமரை ஆகியவற்றுக்கு எத்தனை சதவீதம் ஓட்டுகள் கிடைக்கின்றன என்பன தகவல்களை மக்கள் கவனித்து அரசியல் பேசுகின்றனர்.
இதனிடையே 2022ம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முன்னாள் திமுக சேர்மன் S.H.அஸ்லத்திற்கு மீண்டும் சேர்மன் சீட்டு கிடைத்துவிட கூடாது என்று கட்சியில் புதிதாக சேர்ந்த MMS.அப்துல் கரீமின் மனைவியை சேர்மனாக்கினர். இதனால் தலைமைக்கு கட்டுப்பட்டு சேர்மன் போட்டியிலிருந்து அஸ்லம் ஒதுங்கி கொண்டார்.
ஆனால் துணை சேர்மனுக்கான போட்டியில் திமுக தலைமை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டு இராம.குணசேகரன் துணை சேர்மனாகினார். பின்னர் அர்டா நில அபகரிப்பு, இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் என செயல்பட்டு மக்களின் அதிருப்தியை சம்பாரித்தார் குணசேகரன்.
இந்தநிலையில் ஆரம்பம் முதல் MMS.கரீமுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்ட குணசேகரன் தற்போது அவரை வெளிப்படையாக கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்ட துவங்கிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதற்கு தக்க சான்றாக அதிரை கிழக்கு நகர திமுக அலுவலக முகப்பில் முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை வாழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் பேனரில் கரீமின் ஃபோட்டோவும் பெயரும் இடம்பெறாததை சுட்டிக் காட்டுகின்றனர்.
முன்னதாக சமூக வலைதள பக்கம் ஒன்றில் பேட்டியளித்த குணசேகரனின் ஆதரவாளரும் சேர்மன் ரேசுக்கான சீனியருமான அன்சர்கான், பொருளாதாரம் இருந்ததாலேயே MMS.கரீமின் மனைவி தாஹிரா அம்மாள் சேர்மனாகினார் என்று தெரிவித்தார். மேலும் கழுதை குதிரை ஆகிறது குதிரை கழுதை ஆகிறது என்று சொல்லி உள்ளூர் அரசியல் ஆளுமைகளை தரம்தாழ்ந்து அன்சர்கான் விமர்சித்தது மக்களை முகம்சுலிக்க செய்தது.
இது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் மூத்த வழக்கறிஞர் MMS.சகாபுதீனை குணசேகரனின் ஆதரவாளர்கள் அவமதிக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியாகி அதிரை அரசியல் களத்தை பரபரப்பாக்கி உள்ளது.
அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிற மத முறைப்படி தேங்காய் உடைத்த MMS.சகாபுதீனை பார்த்து வருங்கால சேர்மன் என அன்சாரி என்பவர் சொல்ல, அதற்கு பின்னணி குரலில் ஒருவர், என்னடா இது இங்க உக்காந்துக்கிட்டு எடக்கு முடக்காக பேசுற என அன்சாரியை பேச, மற்றொருவர் ஏ மச்சான் இங்கரு எதாவது கொளுத்திவிட்டுட்டு போய்றாத மச்சான் என்கின்றனர். இதனால் பயந்துபோன அன்சாரி வீடியோ பதிவை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி திமுகவில் MMS அப்துல் கரீம் சேர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்று வரை அவருக்கு கட்சியில் முக்கிய பதவி எதுவும் கொடுக்கவில்லை. இருந்தபோதிலும் புலிவாலை பிடித்த கதையாக சேர்மன் பதவியின் பெயருக்காக அனைத்தையும் பொறுத்து போகிறார் கரீம் என்று சொல்கிறார்கள் நெருக்கமானவர்கள். குணசேகரன் தனது ஆதரவாளர்களை வைத்து அவ்வபோது கரீம், சகாபுதீன் ஆகியோரை சீண்டி பார்க்கிறார்.
எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. அவர்கள் தொடர்ந்து அவமதிக்கும் வகையில் செயல்பட்டால் அரசியல் கப்பல் கவிழ அவர்களே காரணமாக இருப்பார்கள். பின் உள்ளூரில் அரசியல் அனாதைகளாக ஆக்கப்படுவார்கள் என்றுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.








