வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறுவதற்குள் வேறு எந்த ஒரு புதிய மனுக்களையும் இந்த விவகாரத்தில் பதிவு செய்ய அனுமதி கிடையாது எனவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலை தாக்கல் செய்யவும், மனுதாரர் தரப்புக்கு அந்த பதிலின் நகல்களை வழங்கும் படியும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தில் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது அவை அனைத்தையும் நாங்கள் விசாரிப்போம் எனவும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக வேறு எந்த நீதிமன்றத்திலும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாது, ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இருக்கக்கூடிய மனுக்களின் மீது எந்த நீதிமன்றமும் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்க கூடாது. மேலும் மசூதிகள் இருக்கும் இடத்தில், இந்து கோயில்கள் இருந்தது என கூறி புதிதாக தாக்கல் செய்யும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் வாரணாசி ஞானவாபி மசூதி, மதுரா ஷாகி இதாத் மசூதி, ராஜஸ்தான் அஜ்மீர் மசூதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மசூதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட நீதிமன்றங்கள் விசாரணையை தொடர இயலாது. வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991 தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள நிலையில் மற்ற நீதிமன்றங்களில் இது தொடர்பாக உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் உச்சநீதிமன்றம் தடையை விதித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து ஒன்றிய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991ஐ பாதுகாக்க வலியுறுத்தி திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.








